இராணுவத்தின் 231 வது கட்டளை அதிகாரிக்கு காத்தான்குடியில் கெளரவிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, August 6, 2023

இராணுவத்தின் 231 வது கட்டளை அதிகாரிக்கு காத்தான்குடியில் கெளரவிப்பு

இராணுவத்தினரின் 231 வது கட்டளை அதிகாரி திலுப்ப பண்டாரவின் சேவையை கெளரவிக்கும் நிகழ்வு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சம்மேளன மாநாட்டு மண்டபத்தில் (05) சனிக்கிழமை இடம்பெற்றது.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவர் ரவூப் ஏ மஜீத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பொதுச் செயலாளர் அஷ்ஷெய்ஹ் ஏ.எல்.எம்.சபீல் நழீமி சட்டத்தரணி ஏ.உவைஸ். சமூக செயற்பாட்டாளர் கே.எம்.கலீல் உட்பட பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது 231 வது கட்டளை அதிகாரி திலுப்ப பண்டாரவின் சேவையை பாராட்டி காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கெளரவித்தனர்.
231 வது கட்டளை அதிகாரி பிரிகேடியர் திலுப்ப பண்டார மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட்-19 காலத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு போன்ற நெடுக்கடியான காலங்களில் மக்களின் நன்மைக்காக சேவையாற்றியிருந்தார்.

பிரிகேடியர் திலுப்ப பண்டார மாவட்டத்தின் மக்கள் மத்தியில் நல்லுறவை ஏற்படுத்துவதற்காக அயாராது பாடுபட்டதுடன் இயற்கை விவசாயத்தினை இராணுவத்தினர் மூலம் மேற்கொண்டு உற்பத்திகளை மக்களுக்கு வழங்கியிருந்தார்.

இராணுவத்தில் 32 வருடங்கள் சேவையாற்றிய பிரிகேடியர் உயர் கல்வியை தொடர்வதற்காக வெளிநாடு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று காத்தான்குடி அல் அக்ஷ ஜும்ஆப் பள்ளிவாயலுக்கு சென்ற பிரிகேடியர் திலுப்ப பண்டாரயை பள்ளிவாயலின் தலைவர் கே.எல்.எம்.பரீட் தலைமையிலான பள்ளிவாயல் நிருவாகிகள் வரவேற்றனர்.

இதன்போது பள்ளிவாயல் நிருவாகிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். இதையடுத்து பிரிகேடியரின் சேவையை பாராட்டி அவருக்கு பள்ளிவாயல் நிருவாகத்தினரால் நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.

இதையடுத்து காத்தான்குடி ஐந்து பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலுக்கு விஜயம் செய்த பிரிகேடியரை அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் நிருவாகிகளால் வரவேற்பளிக்கப்பட்டது.
பிரிகேடியரை கௌரவிக்கும் வைபவம் அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் அலுவலக மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம் உட்பட அதன் நிருவாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பிரிகேடியர் திலுப்ப பண்டாரவுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னமும் வழங்கி வைத்தனர்.

எம்.எஸ்.எம்.நூருதீன்

No comments:

Post a Comment