13 தொடர்பில் தீர்மானம் ஒன்றுக்கு வரவே ஜனாதிபதி விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார் - ஆசு மாரசிங்க - News View

About Us

About Us

Breaking

Thursday, August 3, 2023

13 தொடர்பில் தீர்மானம் ஒன்றுக்கு வரவே ஜனாதிபதி விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார் - ஆசு மாரசிங்க

(எம்.ஆர்.எம்.வசீம்)

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தை அனைவரும் ஏற்றுக் கொள்ள முடியுமான வகையில் தீர்மானம் ஒன்றுக்கு வருவதற்கான நடவடிக்கையாகவே ஜனாதிபதி அது தொடர்பில் பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார் என ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகாரங்களுக்கு பொறுப்பானவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஆசு மாரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் புதன்கிழமை (02) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், அரசியலமைப்பின் 13ஆம் திருத்தம் எமது நாட்டின் சட்டத்தில் உள்ள விடயமாகும். அதனால் அதனை செயற்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இருந்தபோதும் இதனை முழுமையாக செயற்படுத்துவதில் நீண்ட காலமாக இழுபறி நிலை இருந்து வருகிறது. குறிப்பாக, காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவது தொடர்பாகவே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.

அதனால்தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற சர்வ கட்சி மாநாட்டின்போது இது தொடர்பாக அனைத்து கட்சிகளின் கருத்துக்களையும் கேட்டறிந்து கொள்ள ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருந்தார்.

குறிப்பாக, சட்டத்தில் இருக்கும் அதிகாரங்களை செயற்படுத்துவதற்கு இருக்கும் தடைகளை நீக்கிக் கொள்ள கருத்துகளை தெரிவிக்குமாறே தெரிவித்திருந்தார். அதற்காக கால வரையறை ஒன்றையும் ஜனாதிபதி கட்சிகளுக்கு வழங்கி இருந்தார்.

அதன் பிரகாரம், சர்வ கட்சி மாநாட்டில் கலந்துகொண்டிருந்த கட்சிகள் 13ஆம் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இருக்கும் தடைகளை நீக்கி எவ்வாறு செயற்படுத்துவது என அவர்களின் யோசனைகளை தெரிவிப்பார்கள்.

அதன் பிரகாரம், இது தொடர்பில் பாராளுமன்றத்தில் கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அந்த கலந்துரையாடலை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பாகவும் 13ஆம் திருத்தத்தை மேலும் பலப்படுத்தி அனைத்து மாகாண சபைகளும் அதன் அதிகாரங்களை எந்த தடைகளும் இல்லாமல் செயற்படுத்துவதன் தேவைப்பாடு தொடர்பாகவும் ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு தெளிவுபடுத்துவார் என நாங்கள் நம்புகிறோம்.

அத்துடன் 13ஆம் திருத்தம் தொடர்பாக ஜனாதிபதியின் இந்த விசேட உரை அடுத்த பாராளுமன்ற அமர்வில் இடம்பெறும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

அடுத்த பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment