இழக்கப்படும் நிலையில் இருந்த எமது நாட்டு உழைக்கும் மக்களின் நிதியங்கள், உள்ளூர் கடன் மறுசீரமைப்பின் மூலம் பாதுகாக்கப்படும் என இலங்கை வங்கிச் சங்கத்தின் உறுப்பினர், இலங்கை வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரசல் பொன்சேக்கா தெரிவித்தார்.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு முன்னெடுக்கப்படாவிட்டால் ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை நிதி உள்ளிட்ட நிதியங்களில் உள்ள பணம் ஊழியர்களுக்கு கிடைக்காமல் போகும் அபாயம் இருந்தது என்றும், ஆனால் கடன் மறுசீரமைப்பின் மூலம் இந்தப் பணம் பாதுகாக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்படும் ‘101 ‘ நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோதே, இலங்கை வங்கி சங்கத்தின் உறுப்பினரான இலங்கை வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரசல் பொன்சேக்கா இதனைத் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த ரசல் பொன்சேக்கா, ”உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்கான தேவை இன்று நேற்று எழுந்ததல்ல. இலங்கையின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி துறைகளுக்கு இடையில் பாரிய இடைவெளி காணப்படுகின்றது. சுதந்திரத்திற்குப் பின்னர் சில வருடங்கள் தவிர, இறக்குமதிக்காக நாம் செலவழித்த டொலர்களுக்கும், ஏற்றுமதியின் ஊடாகக் கிடைக்கும் டொலருக்கும்மிடையில் பாரிய வித்தியாசம் காணப்பட்டது.
அண்மைக்காலத்தில் வருடத்திற்கு இறக்குமதிக்கு இருபது பில்லியன் டொலர்கள் தேவை. ஆனால், ஏற்றுமதி மூலம் நமக்கு 12 பில்லியன் டொலர்கள் மட்டுமே கிடைக்கிறது. பற்றாக்குறையை ஈடுகட்ட, அன்றிருந்த அரசுகள் கடன் வாங்கின. தொடர்ந்து கடன் வாங்கியதாலும், அந்த ஆண்டின் வர்த்தக நிலுவையை விட முந்தைய கடனுக்கான வட்டியை செலுத்த வேண்டியதாலும், நாடு பெரும் நெருக்கடியில் சிக்கியது. அதனுடன் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகவும் கடனுதவி எடுக்க வேண்டியிருந்தது.
இலங்கையால் தாங்க முடியாத அளவுக்கு கடன் வாங்க வேண்டியிருந்தது. 2022 ஏப்ரல் மாதமாகும்போது நாடு அதன் விளைவை உணரத் தொடங்கியது. இதனால் கடனை செலுத்த முடியாத நிலையில் இலங்கை இருப்பதாக மத்திய வங்கி ஆளுநரால் அறிவிக்க நேரிட்டது. தேவையான டொலரை எங்களால் ஈட்ட முடியவில்லை. வெளிநாடுகள் எங்களுக்கு கடன் தரவில்லை. இறுதியாக, கடன் நெருக்கடி நாட்டின் பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதித்தது.
நாட்டிலுள்ள வர்த்தக உரிமையாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சிலர் தொழில்களை இழந்தனர். நாளடைவில் இது ஒரு சமூகப் பிரச்சினையாக மாறியது. அதன் பின்னரே, மக்கள் வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கினர். இறுதியாக, அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து சில நிவாரணங்களைப் பெற வேண்டியிருந்தது.
கடனை மீளச் செலுத்துவதற்கு எங்களுக்கு வருமானம் கிடையாது. கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்கும் முன், நாம் சில ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அந்தத் திட்டத்தை தயாரிக்கும் செயற்பாடே உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பதில் நடக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்களாக மொத்தமாக 84 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட வேண்டியுள்ளது. இதற்கான போதுமான பொருளாதாரம் இலங்கைக்கு கிடையாது. அந்த கடனுக்கான வட்டி ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த நேரத்தில்தான் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
இந்த 84 பில்லியன் டொலர் கடனை மீளச் செலுத்த நாங்கள் சில ஏற்பாடுகளை செய்ய வேண்டியிருந்தது. வெளிநாட்டுக் கடன்களை மறுசீரமைப்பதில், வெளிநாட்டுக் கடன்களை வழங்கிய நாடுகளுடன் உடன்பாடு எட்டப்பட வேண்டும். உடன்பாடு ஏற்பட்டவுடன், கடனை தள்ளுபடி செய்யலாம். கடன் தள்ளுபடியின்போது உள்ளூர் கடன் மறுசீரமைப்பு விடயம் தலைதூக்கியது. ஏனெனில், எந்த வெளிநாட்டுக் கடன் வழங்குநரும் உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்காமல் தங்கள் கடனை மட்டும் மறுசீரமைக்க விரும்பப்போவதில்லை.
இலங்கையிலுள்ள வங்கி வைப்பாளர்களைப் பாதிக்காத வகையில் உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கு அரசாங்கம், நிதி அமைச்சு மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியன ஒத்துழைப்பு வழங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதில் வைப்பாளர்களுக்கு இழப்பு அல்லது பாதிப்பு ஏற்படாது என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். மேலும், வங்கி வட்டியும் இதனால் பாதிக்கப்படாது. செல்லுபடியாகும் காலம் வரை நிலையான வைப்புகளுக்கு உரிய வட்டி வழங்கும். அந்த நிலையான வைப்புக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் இன்று மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியருப்பார்கள். ஆனால் அவ்வாறான நிலை ஏற்படுவதற்கு இடமளிக்கப்படவில்லை.
ஓய்வூதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியை செலுத்துவதற்கு பெருமளவான பிணைமுறிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு மாற்றுத் தீர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று வட்டி விகிதத்தைக் குறைப்பது. மற்றொன்று கடனை மீளச் செலுத்துவதை ஒத்திவைப்பது. இதன் காரணமாக, ஊழியர்களின் EPF/ETF மற்றும் ஏனைய நிதியங்களில் உள்ள பணம் பாதுகாக்கப்படுகிறது. மேலும், இந்த நிதியங்களுக்கு 2025 வரை 12% வட்டி செலுத்த அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.
ஆனால் தற்போது வட்டி விகிதம் பெருமளவு குறைந்துள்ளது. அரசு உத்தரவாதம் அளித்துள்ள வட்டியை வழங்கும் என்று நம்புகிறோம். பணவீக்கத்தால் ஊழியர் நிதியங்களுக்கு அரசு வழங்கும் வட்டி வருமானம் அதிகமாக உள்ளது. இருப்பினும், வட்டி வருமானத்தின் இந்த பிரச்சினை பங்களிப்பு நிதிகளை மட்டுமே பாதிக்கிறது. எனவே, ஊழியருக்கு எந்த நஷ்டமும் ஏற்படாது. அனைத்துப் பணத்தையும் இழப்பதற்குப் பதிலாக, உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பின் மூலம் இந்த மட்டத்திலாவது பணத்துடன் குறிப்பிடத்தக்க வட்டியைப் பெறுவது மகிழ்ச்சியான விடயமாகும்.
இந்த பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணப்பட்ட பிறகு நாட்டில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி பண வீக்கம் குறையும். இத்திட்டத்தின் மூலம் நாடு பல பொருளாதார நன்மைகளைப் பெறும். நாட்டுக்குத் தேவையான பொருட்களையும் மருந்துப் பொருட்களையும் எளிதாகப் பெறலாம். மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கிறது. அந்த நிலையை அடைய நாம் சில தியாகங்களைச் செய்ய வேண்டும். இல்லையேல் நாடு மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குவதைத் தடுக்க முடியாது.
வங்கிச் சங்கமும் உள்ளூர் வங்கிகளும் ஜனாதிபதியின் திட்டத்திற்கு ஆதரவு வழங்கின. இதனால், வங்கி வட்டியை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் வட்டி வீதம் குறைக்கப்படலாம்.
குறைந்த வட்டி வீதத்தின் கீழ், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள், ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் பெரிய வர்த்தகர்கள் தங்கள் வர்த்தகங்களை மேம்படுத்த முடியும். இதற்குத் தேவையான உதவிகளை வழங்க வங்கிகள் தயாராக உள்ளன. இலங்கை மத்திய வங்கியின் ஆதரவினாலும் வங்கிகளின் ஒற்றுமையினாலும் இந்த நிதி நெருக்கடியில் இருந்து மீள முடியும் என நம்புகிறேன்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நாட்டைக் கட்டியெழுப்ப முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு பங்களிக்கும் திறன் வங்கியாளர்களுக்கு உள்ளது. எதிர்காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு தேவையான கடன்களைக் குறைந்த வட்டியில் வழங்க முடியும்.” என்று இலங்கை வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரசல் பொன்சேக்கா தெரிவித்தார்.
No comments:
Post a Comment