முத்துராஜாவை மீண்டும் தாய்லாந்துக்கு கொண்டு சென்றமையால் இலங்கை தொடர்பில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிருப்தி - News View

About Us

About Us

Breaking

Monday, July 31, 2023

முத்துராஜாவை மீண்டும் தாய்லாந்துக்கு கொண்டு சென்றமையால் இலங்கை தொடர்பில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிருப்தி

இந்நாட்டுக்கு நன்கொடையாகக் கிடைக்கப் பெற்ற முத்துராஜா யானையை மீண்டும் தாய்லாந்துக்கு கொண்டு சென்றமை காரணமாக இலங்கை தொடர்பில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏற்பட்ட அதிருப்தி சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அண்மையில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த யானை மீண்டும் தாய்லாந்துக்கு கொண்டுசெல்லப்பட்டது நிபந்தனைகளுடனா என்பது மற்றும் அதற்கான கரணங்கள் என்ன என்பது குறித்தும் அந்தக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும அமைச்சின் செயலாளரிடம் வினவினார்.

வனசீவரசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை, மிருகக்காட்சிசாலைகள் திணைக்களம் மற்றும் அரசாங்க மாரக் கூட்டுத்தாபனம் என்பவற்றின் வருடாந்த அறிக்கைகளை குழுவில் கருத்திற் கொள்வதற்கு வனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட நிறுவனங்களின் பணிப்பாளர்களின் பங்கேற்புடன் இந்தக் குழுக் கூட்டம் அண்மையில் (18) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

2001 ஆம் ஆண்டில் தாய்லாந்து அரசின் நன்கொடையாக இலங்கைக்குக் கிடைக்கப் பெற்ற முத்துராஜா யானை அரச பட்டயம் ஒன்றின் மூலம் அளுத்கம கந்தே விகாரைக்கு தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளது என இதன்போது புலப்பட்டது.

இந்த யானை தாவர, விலங்கினப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பழக்கப்பட்ட யானையொன்றாக வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் இலக்கம் 178 கோப்பின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அதனையடுத்து தனியார் சொத்தாகக் கருத்தப்பட்டுள்ளதால், அதன் பின்னர் இந்த விடயம் மிருகக்காட்சிசாலைகள் திணைக்களம் மற்றும் வனசீவரசிகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விலகியுள்ளது.

இந்த யானையை பராமரிப்பதில் ஏற்பட்ட குறைபாடுகளினால் யானையின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், அதனை அடிப்படையாகக் கொண்டு தாய்லாந்தில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள், சமூக வலைத்தளங்கள் அந்த யானையை தாய்லாந்துக்கு கொண்டு வருமாறு அந்நாட்டு அரசாங்கத்திடமும், இந்நாட்டிலுள்ள தாய்லாந்து தூதுவரிடமும் கோரிக்கை விடுத்துள்ளன.

அதற்கமைய, வெளிவிவகார அமைச்சு மற்றும் தாய்லாந்து தூதுவர் ஆகியோரிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைக்கு அமைய, மிருகக்காட்சிசாலைகள் திணைக்களம் தலையிட்டு யானை தாய்லாந்துக்கு கொண்டுசெல்லப்பட முன்னர் ஆரம்ப சிகிச்சையாக அதன் கால்களின் பின்பகுதியில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சையளித்து 90% க்கும் அதிகமாகக் குணமடைந்துள்ளது.

ஆனால் யானையின் முன் கால்களில் உள்ள காயங்கள் குணமடைவதற்கு நீண்ட காலம் தேவைப்படுவதால், தாய்லாந்தில் யானைக்கு சிகிச்சை அளிக்கும் வசதிகள் இந்நாட்டை விட அதிகம் என்பதால், யானை குணமடைந்த பின்னர் மீண்டும் கந்தே விகாரைக்கு ஒப்படைக்கப்படும் என விகாரையின் தலைமை தேரருக்கு உறுதியளித்து, தாய்லாந்து அரசினால் சுமார் 220 மில்லியன் ரூபாய் நிதி செலவிடப்பட்டு பிரத்தியேக விமானம் மூலம் யானை தாய்லாந்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

ஆனால் முத்துராஜா யானையை இலங்கைக்கு திருப்பி அனுப்ப மாட்டோம் என தாய்லாந்தின் சுற்றுச்சூழல் அமைச்சர் கூறியதால், இது இலங்கைக்கு சர்வதேச அளவில் அவமானத்தை ஏற்படுத்தியது. இதற்கு உண்மையிலேயே பொறுப்பான அரச நிறுவனம் எது என்பது குறித்து குழு வினவியது.

யானையை தனிப்பட்ட பயன்பாட்டிற்கு விகாரைக்கு வழங்கியுள்ளதால் யானையின் பொறுப்பு மிருகக்காட்சிசாலைகள் திணைக்களம் மற்றும் வனசீவரசிகள் திணைக்களத்திற்கு இல்லை என வனசீவரசிகள் மற்றும் வனப்பாதுகாப்புத் திணைக்களத்தின் செயலாளர் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சினால் கிடைக்கப் பெற்ற அறிவித்தலின் பிரகாரம், யானையை மீள அழைத்துச் செல்வதற்கு தேவையான வசதிகளை மாத்திரம் அமைச்சு வழங்கியது எனவும் அவர் தெரிவித்தார்.

எனினும், வெளிநாடுகளில் இருந்தும் யானைகளைக் காண சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதும், யானைகளுக்குப் பெயர் போன நாட்டிற்கு நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட யானையைப் பராமரிக்க முடியாமல் போனமை சிக்கலானது எனக் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

கால்நடை மருத்துவர்களின் உதவியை முறையாகப் பெற்று யானைக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் தங்களுக்கு இருந்தபோதிலும், தாய்லாந்து அரசு மற்றும் மக்களின் பலத்த செல்வாக்கு காரணமாக யானையை தாய்லாந்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன், பலாங்கொடை பிரதேசத்தில் யானை வேலிகள் அமைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பிலும் குழு கவனம் செலுத்தியது.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் அதிக விலையில் குடிநீர் போத்தல்கள் உள்ளிட்ட நுகர்வுப் பண்டங்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பில் ஏதேனும் ஒழுங்குபடுத்தல் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அதன் வண்ணத்துப்பூச்சிப் பூங்கா பல வருடங்களாக மூடப்பட்டுள்ளமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான அகில எல்லாவல மற்றும் வருண லியனகே ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment