(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பொலிஸ்மா அதிபரை நியமிப்பதற்கான நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. ஓரிரு தினங்களில் ஜனாதிபதி அதற்கான பெயர்களை பரிந்துரை செய்வார் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (7) பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்ந்தும் காலம் தாழ்த்தப்பட்டுவருவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
பிரதமர் தொடர்ந்து தெரிவிக்கையில், பொலிஸ்மா அதிபரின் ஓய்வு பெறலுக்குப் பின்னர் அவருக்கான சேவைக் காலத்தை ஜனாதிபதி நீடித்திருந்தார். அந்த கால நீடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது.
புதிய பொலிஸ்மா அதிபரை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அது தொடர்பான பணிப்புரைகளையும் விடுத்துள்ளார்.
ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்களுக்கு இணங்க அவர் அதற்கான பெயர்களை அரிசியலமைப்பு பேரவைக்கு அறிவிப்பார். அந்த வகையில் இன்னும் 48 மணித்தியாலங்களுக்குள் புதிய பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கலாம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
எவ்வாறெனினும் எந்த தடைகளுமின்றி நாடளாவிய ரீதியில் பொலிஸ் துறைக்கான சேவைகள் முறையாக முன்னெடுக்கப்படுகின்றன. மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் அதிபர்களின் கண்காணிப்பில் அந்த நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
அத்துடன் அரசியலமைப்பு பேரவைக்கு சபாநாயகரே தலைமை வகிக்கின்றார். அந்த பேரவையில் நானும் எதிர்க்கட்சித் தலைவரும் கூட அங்கம் வகிக்கின்றோம். அங்கு பேசப்படும் விடயங்களை வெளியில் வெளியிடுவதில்லை. அந்தப் பொறுப்பு அங்கத்தினர்கள் அனைவருக்கும் உள்ளது.
அதேவேளை அதன் தலைவரான சபாநாயகருக்கு எந்த சந்தர்ப்பத்திலும் அந்த பேரவையை கூட்டுவதற்கு அதிகாரம் உள்ளது.
அதேபோன்று 21 ஆவது அரசியலமைப்பை கொண்டு வருவதற்கு மிகவும் அவசரப்பட்டது போன்று அதன் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்கும் நடவடிக்கைகள் இன்னும் முடிவு பெறவில்லை. அந்த வகையில் பொலிஸ்மா அதிபரின் நியமனம் விரைவில் இடம்பெறும் என்றார்.
No comments:
Post a Comment