(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
நாடு வங்குரோத்து அடைந்தமைக்கான காரணத்தை உண்மையாக அறிந்து கொள்ள தேவை இருப்பதாக இருந்தால் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரையே அதன் தலைவராக நியமிக்க வேண்டும். ஆளும் கட்சி ஒருவரை தலைவராக நியமித்திருப்பது திருடனின் தாயிடம் சாஸ்திரம் கேட்பது போலாகும். அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (6) ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டின் நிதி வங்குரோத்துக்கான காரணங்களை கண்டறிந்து பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட தெரிவுக்குழு அமைக்க வேண்டும் என பிரேரணை கொண்டுவந்தது எதிர்க்கட்சியாகும்.
அதனால் நாடு வங்குரோத்து அடைந்தமை குறித்து தேடிப்பார்க்கும் தெரிவுக்குழுவின் தலைவராக ஆளும் கட்சி உறுப்பினர் சாகல காரியவசம் பெயரிட்டிருக்கிறார். இது திருடனின் தாயிடம் சாஸ்திரம் கேட்பது போலாகும்.
நாடு வங்குரோத்து அடைந்தமைக்கான காரணத்தை உண்மையாக அறிந்து கொள்ள தேவை இருப்பதாக இருந்தால் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரை அதன் தலைவராக நியமிக்க வேண்டும், அதனால்தான் நிதிக்குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என நிலையியற் கட்டளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு வங்குரோத்து அடையும் வரைக்கும் எமக்கு தெரியாது. அப்போது அரச தரப்பு உறுப்பினர் ஒருவரே நிதிக்குழுவின் தலைவராக இருந்தார். அதனால் நாடு வங்குரோத்து அடைந்தமை குறித்து தேடிப்பார்க்கும் தெரிவுக்குழுவின் தலைவராக எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரை நியமிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினரின் பெயரையும் நாங்கள் தெரிவித்திருக்கிறோம். எதிர்க்கட்சியில் யாரை வேண்டுமானாலும் நியமிக்கலாம் என்றார்.
No comments:
Post a Comment