நூருல் ஹுதா உமர்
எதிர்காலத்தை சீரழிக்கும் நோக்கில் திட்டமிட்டே மக்கள் மத்தியில் பரப்பப்படும் போதைப் பொருளை கட்டுப்படுத்தும் பணியில் இளைஞர்கள் முன்வந்து பணியாற்ற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
பாலமுனையில் அண்மையில் நடைபெற்ற விளையாட்டு போட்டியொன்றின் பரிசளிப்பில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றும் போது, அண்மையில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் அதிகாரிகளுடன் இணைந்து போதையை இல்லாதொழித்து சிறந்த எதிர்காலத்தை உருவாக்க இளைஞர்கள் சுயமாக முன்வந்தால்தான் முடியும்.
தலைநகரில் போதையொழிப்புக்கு பொறுப்பாக இருக்கும் முக்கிய அதிகாரி ஒருவரை சந்தித்தேன். அவருடன் கலந்துரையாடியபோது இந்த கிழக்கு பிராந்தியத்தில் போதைப் பொருளை அறிமுகப்படுத்தி மக்களிடம் சேர்த்தது முக்கிய பிரமுகர்கள்தான் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
கிழக்கு பிராந்திய கல்வி, ஒழுக்கம் என்பவற்றை சீரழிக்க இந்த மோசமான பழக்கத்தை தமிழ், முஸ்லிம் இளைஞர்களிடம் உருவாக்க நாட்டிலிருந்த சில முக்கிய பிரமுகர்கள் காரணமாக இருந்தார்கள் என்ற அதிர்ச்சியான உண்மையை எனக்கு அவர் அப்போது தெரிவித்தார்.
இந்த ஆபத்திலிருந்து எமது இளைஞர்களையும், நாளைய தலைமுறையையும் பாதுகாக்க வேண்டும் என்ற நிலை இருக்கின்றபோது நாங்களும் எங்களால் முடியுமானவரை போதைப் பொருளை கட்டுப்படுத்த முயற்சிகளை செய்து வருகின்றோம்.
இப்போது இளைஞர்களும் முன்வந்து விழிப்புணர்வை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளதை உணர்கின்றோம்.
சிவில் அமைப்புக்கள் இந்த வேலைத்திட்டத்திலும் தங்களின் பார்வையை செலுத்த வேண்டியது அவசியமாகிறது. விளையாட்டு இப்படியான தவறான பாதையிலிருந்து இளைஞர்களை பாதுகாக்கும் என்று நம்புகிறேன் என்றார்.
No comments:
Post a Comment