ஜனாதிபதியின் அழைப்பு மக்களை வாழ வைப்பதற்கா ? அல்லது அழிப்பதற்கா ? - எதிர்க்கட்சித் தலைவர் - News View

About Us

About Us

Breaking

Friday, July 7, 2023

ஜனாதிபதியின் அழைப்பு மக்களை வாழ வைப்பதற்கா ? அல்லது அழிப்பதற்கா ? - எதிர்க்கட்சித் தலைவர்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அரசாங்கம் ராஜபக்ஷவின் விருப்பத்திற்கிணங்க தேர்தலை நடத்தாமல் கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு முன்னைய பிரதிநிதிகளை அழைக்கும் சட்டமூலத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் ஊழலுக்கு எதிரான சட்டம் கொண்டுவர ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுக்கத் தவறி இருக்கிறது. என்றாலும் தற்போதாவது இந்த சட்டமூலம் கொண்டுவந்திருப்பதை வரவேற்கிறோம். மேலும் தேசிய தேவை கருதி ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுக்கிறார். ஜனாதிபதியின் இந்த அழைப்பு மக்களை வாழ வைப்பதற்கா அல்லது மக்களின் வாழ்வை அழிப்பதற்கா என கேட்கிறோம் என எதிர்க்கட்சித் தலவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) இடம்பெற்ற ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், அரசாங்கம் கொண்டுவந்துள்ள சட்டமூலத்தை விட வலுவான ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை 2022 டிசம்பரில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார சமர்ப்பித்திருந்தாலும், அரசாங்கம் அது தொடர்பில் பொருட்படுத்தவில்லை.

அந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டிருந்தால் கடந்த காலத்தில் நாடு இழந்த, நாட்டிலிருந்து திருடப்பட்ட சொத்துக்கள், வளங்களை மீளப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.

மேலும் இந்த சட்டமூலத்திற்கு எதிர்க்கட்சி முன்வைத்த வலுவான திருத்தங்களை நீக்கி எஞ்சிய திருத்தங்களை மட்டும் ஏற்றுக் கொள்வதன் மூலம், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்காகவே அரசாங்கம் இந்நேரத்தில் ஊழல் எதிர்ப்பு சட்டத்தை சமர்ப்பித்துள்ளது தெளிவாகின்றது.

உண்மையிலேயே ஊழலை இல்லாதொழிப்பதற்காக அல்ல, எனவே நேர்மையாக இந்தச் சட்டத்தின் மூலம் ஊழல், மோசடி, திருட்டை ஒழித்து வெளிப்படையான ஆட்சியை உருவாக்க முடியுமா? என்பது குறித்து கேள்வி எழுகிறது.

மேலும் தேசத்தின் நலன்கருதி ஒன்றிணையுமாறு ஜனாதிபதி தெரிவிக்கிறார். ஒன்றிணையுமாறு தெரிவிப்பது மக்களை வாழ வைப்பதற்கா அல்லது மக்களின் வாழ்வை அழிப்பதற்கா? மோசடிக்காரர்களை, திருடர்களைப் பிடிப்பதற்கா? திருடர்களைப் பாதுகாப்பதற்கா? என்பது குறித்து எமக்கு கேள்வி எழுகிறது.

அத்துடன் இந்தச் சட்டத்தில் சில சாதகமான அம்சங்கள் இருந்தாலும், பல பலவீனங்கள் இருக்கின்றன. அது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அத்துடன் பெண்டோரா பத்திரிகையின் மூலம் வெளிப்பட்ட கோடிக்கணக்கான டொலர்கள் மற்றும் திருடப்பட்ட நாட்டின் சொத்துக்களை மீள பெற்றுக் கொண்டு தேசிய வளங்கள் நிதியம் அமைக்குமாறு பிரேரிக்கிறேன். மேலும் ஊழல் மோசடி இல்லாத நாட்டை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்றார்.

No comments:

Post a Comment