சர்ச்சைக்குரிய மல்வானை வீடு, காணி நீதியமைச்சுக்கு சொந்தமானது - விஜயதாஸ ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Friday, July 7, 2023

சர்ச்சைக்குரிய மல்வானை வீடு, காணி நீதியமைச்சுக்கு சொந்தமானது - விஜயதாஸ ராஜபக்ஷ

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

சர்ச்சைக்குரிய மல்வானை வீடு மற்றும் காணி நீதியமைச்சுக்கு சொந்தமானது. இந்த வீட்டை அரசுடமையாக்கும் பணிகள் தாமதமான நிலையில் உள்ளன. இருப்பினும் வெகுவிரைவில் அரசுடமையாக்கப்படும் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) இடம்பெற்ற ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் மீதான விவாதத்தின்போது உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, ஊழல் மோசடியுடன் தொடர்புடையவர்களில் பலர் பாராளுமன்றத்தில் உள்ளார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார். ஆனால் அது யார் யார் என்று குறிப்பிடவில்லை.

நான் 18 வருடங்களாக அமைச்சுப் பதவி வகித்துள்ளேன். அமைச்சராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துக் கொண்டு பெற்ற நிதியை கொண்டு வாழவில்லை.

அமைச்சு, பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஊடாக கிடைக்கும் வருமானத்தை புற்றுநோய் சிகிச்சை வைத்தியசாலை, லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை, உட்பட நலன்புரி அமைப்புக்களுக்கு வழங்குகிறேன்.

கடந்த 38 வருட காலமாக வருமான வரி செலுத்துகிறேன். தற்போதைய வரி அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளேன். அதற்காக வரி செலுத்தாமல் இருக்கவில்லை. அரச நிதியை மோசடி செய்யவுமில்லை.

சர்ச்சைக்குரிய மல்வானை காணி மற்றும் இல்லம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பில் சாட்சியமாகிய இரு தரப்பினரும் மல்வானை வீடு மற்றும் அதனுடனான காணி தமக்கு சொந்தமானது அல்ல என நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்கள்.

ஆகவே, அந்த இல்லம் மற்றும் காணியை நீதியமைச்சுக்கு பொறுப்பாக்குமாறு நான் அமைச்சரவைப்பத்திரம் சமர்ப்பித்தேன். அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மல்வானை வீட்டை அரசுடமையாக்கும் பணிகள் தாமத நிலையில் உள்ளன. இருப்பினும் நிச்சயம் அரசுடமையாக்கப்படும்.

அரசியல் அழுத்தங்களுக்கு அமைய வழக்குகளை சட்டமா அதிபர் மீளப் பெற்றுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது.

தற்போதைய சட்டமா அதிபர் பதவியேற்றதன் பின்னர் ஒரு வழக்கை மாத்திரம் மீளப் பெற்றுள்ளார். போதிய சாட்சியம் இல்லாத காரணத்தால் மேல் நீதிமன்ற நீதிபதியின் அனுமதியுடனே அந்த ஒரு வழக்கு மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டது.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு ஓய்வு பெறும் காலம் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். ஆணைக்குழுவின் செயற்பாடு, உறுப்பினர் நியமனம் தொடர்பில் முரண்பாடான தன்மை காணப்படுகிறது. அதற்காகவே புதிதாக சட்டமியற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment