பயங்கரவாதம், தீவிரவாத செயற்பாடுகள் தொடர்பில் பிராந்திய நாடுகள் இணைந்து செயற்பட வேண்டும் - ஜெனரல் ஷவேந்திர சில்வா - News View

About Us

About Us

Breaking

Friday, July 14, 2023

பயங்கரவாதம், தீவிரவாத செயற்பாடுகள் தொடர்பில் பிராந்திய நாடுகள் இணைந்து செயற்பட வேண்டும் - ஜெனரல் ஷவேந்திர சில்வா

(எம்.மனோசித்ரா)

ஆட் கடத்தல், நாடு கடந்த குற்றங்கள் மற்றும் பிராந்திய நாடுகளில் அமைதிக்கு சவால் விடும் பயங்கரவாதம், தீவிரவாதம் தொடர்பான அச்சுறுத்தல்கள் தொடர்பில் பிராந்திய நாடுகள் இணைந்து செயற்பட வேண்டும் என்று பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் விரிவான மற்றும் ஒன்றோடொன்று இணைந்த பாதுகாப்பு கட்டமைப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட முத்தரப்பு ஏழாவது கொழும்பு பாதுகாப்பு மாநாடு புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2023-2024 ற்கான ஒத்துழைப்பு நெறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கான அணுகுமுறைகள் மற்றும் கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் ஆறாவது பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட செயற்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் ஏழாவது பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டக் கூட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி அலுவலகத்திலிருந்து இணைய தொழில்நுட்பம் மூலமாக தொடக்க உரையை நிகழ்த்திய பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் ஷவேந்திர சில்வா, ஏழாவது பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மாநாட்டினை ஏற்பாடு செய்யும் நாடான மாலைத்தீவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

மேலும், பிராந்திய பாதுகாப்பு கூட்டத்தில் கலந்து கொண்டதற்காக உறுப்பு நாடுகள் மற்றும் பார்வையாளர்கள் நாடுகளின் அனைத்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுக்கும், அந்தந்த நாட்டின் முன்னணி ஒருங்கிணைப்பாளர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

அண்டை நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் அதேவேளையில், பிராந்திய பாதுகாப்பு கட்டமைப்பை உறுதி செய்வதற்கு இறுதியில் பயனளிக்கும் இந்த வகையான கூட்டங்களின் முக்கியத்துவத்தை அவர் மேலும் வலியுறுத்தினார்.

மாநாட்டில் உரையாற்றிய பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி, பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து கலந்துரையாட உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.

ஆட் கடத்தல் மற்றும் நாடு கடந்த குற்றங்கள் மற்றும் பிராந்திய நாடுகளில் அமைதிக்கு சவால் விடும் பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் தீவிரமயமாக்கல் தொடர்பான அச்சுறுத்தல்களையும் தனது உரையின் போது சுட்டிக்காட்டினார்.

தகவல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்துடன், சைபர் கிரைம், தரவு இடைமறிப்பு மற்றும் சைபர் தாக்குதல்கள் போன்ற புதிய அச்சுறுத்தல்களுக்கு பிராந்திய நாடுகளின் சிறந்த தயாரிப்புகளின் தேவை தொடர்பாகவும் இந்த அமர்வின்போது கலந்துரையாடப்பட்டன.

பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பில் மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த நிவாரணங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று ஜெனரல் ஷவேந்திர சில்வா மேலும் சுட்டிக்காட்டினார்.

மாலைத்தீவு நாட்டினால் நடத்தப்பட்ட கூட்டத்தில் உறுப்பு நாடுகளான இந்தியா மற்றும் மொரீஷியஸ் தீவு ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

மேலும், பங்களாதேஷ் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பார்வையாளர்களாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment