அகதி முகாம் மீது மேற்கொண்ட தாக்குதலை இலங்கை கண்டிக்க வேண்டும் - ரவூப் ஹக்கீம் - News View

About Us

About Us

Breaking

Friday, July 7, 2023

அகதி முகாம் மீது மேற்கொண்ட தாக்குதலை இலங்கை கண்டிக்க வேண்டும் - ரவூப் ஹக்கீம்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீன் அகதி முகாம் மீது மேற்கொண்டுள்ள தாக்குதலுக்கு இலங்கை அரசாங்கத்தின் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சபையில் கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (6) ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பலஸ்தீனில் அகதி முகாம்கள் இஸ்ரேல் இராணுவத்தினரால் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன. இது அவர்களின் இராணுவ அதிகாரத்தைக் கொண்டு நடத்தப்படும் தாக்குதலாகும்.

இஸ்ரேல் இராணுவத்தினர் அங்குள்ள அகதி முகாம்களில் மேற்கொண்ட தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் இராணுவத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து பல நாடுகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.

இஸ்ரேல் தூதுவர் உங்களை சந்தித்திருக்கிறார். ஆகக்குறைந்தது எமது கண்டனத்தையாவது நாங்கள் தெரிவிக்க வேண்டும். அரசாங்கம் சார்பில் நாங்கள் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

இந்த இராணுவ நடவடிக்கையை மீண்டும் மேற்கொள்வதாக இஸ்ரேல் பிரதமர் தெரிவித்திருக்கிறார். இதனால் அதிகமான இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால் வெளிவிவகார அமைச்சர் என்ற வகையில் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

இதற்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பதிலளிக்கையில், இந்த சம்பவம் யாரும் எதிர்பார்க்கப்படாத ஒன்று. ஒரு மாதத்துக்கு முன்னர் கண்டனத்தை தெரிவித்திருந்தோம். இந்த விடயம் குறித்தும் அவதானம் செலுத்துவோம்.

அத்துடன் இலங்கை அரசாங்கம் எப்போதும் பலஸ்தீன் மக்களுக்காக குரல் கொடுத்து வந்திருக்கிறது. அவர்கள் அவர்களின் உரிமைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த இடத்தில் அமைதி நிலவும்வரை நாங்கள் குரல் கொடுப்போம் என்றார்.

No comments:

Post a Comment