புதுச்சேரி - திருகோணமலை கப்பல் சேவை முன்னெடுக்கப்பட்டால் வணிக தொடர்பு மேம்படும் : கிழக்கு மாகாண ஆளுநர் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 6, 2023

புதுச்சேரி - திருகோணமலை கப்பல் சேவை முன்னெடுக்கப்பட்டால் வணிக தொடர்பு மேம்படும் : கிழக்கு மாகாண ஆளுநர்

இந்தியாவின் புதுச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்கு கப்பல் சேவை முன்னெடுக்கப்பட்டால் சுற்றுலா மற்றும் வணிகத் தொடர்புகள் மேம்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இந்த கோரிக்கை தொடர்பில் அவர் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் கடிதமொன்றை கையளித்துள்ளதாக 'த ஹிந்து' செய்தி வௌியிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - காரைக்கால் இடையிலான கப்பல் சேவைக்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதன் வழித்தடத்தை மாற்றி புதுச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்கு கப்பல் சேவையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் சுற்றுலா, வணிகத் தொடர்பு மேம்படும் என தெரிவித்து புதுச்சேரி முதல்வரிடம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கடிதமொன்றை கையளித்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை நேற்று முன்தினம் (04) முதல்வர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடியதாக 'த ஹிந்து' செய்தி வௌியிட்டுள்ளது.
காரைக்காலில் இருந்து யாழ். காங்கேசன்துறை வரையிலான கப்பல் சேவை முயற்சிகளுக்கு நடைமுறை சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டியுள்ள கிழக்கு மாகாண ஆளுநர், அந்த வழித்தடத்தை மாற்றி புதுச்சேரி - காங்கேசன்துறை மற்றும் திருகோணமலைக்கு கப்பல் சேவையை தொடங்க நடவடிக்கை எடுத்தால் சுற்றுலா மற்றும் வணிகத் தொடர்பு மேம்படும் என கூறியுள்ளார்.

இதனிடையே, திருக்கோணேஸ்வரம் கோயில், யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் மற்றும் நயினாதீவு, கதிர்காமம் முருகன் கோயில், நுவரெலியா சீதை அம்மன் கோயில், இறம்பொடை ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு தரிசனங்களை மேற்கொள்ள இலங்கைக்கு முதல்வர் ரங்கசாமி வருகை தர வேண்டும் எனவும் கிழக்கு மாகாண செந்தில் தொண்டமான் அழைப்பு விடுத்துள்ளார்​.

இந்த சந்திப்பின்போது புதுச்சேரி சபாநாயகர் செல்வம் மற்றும் அமைச்சர் பிரியங்கா ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment