பண வீக்க வீழ்ச்சியை அடுத்து வட்டி வீதங்களை மேலும் குறைத்தது இலங்கை மத்திய வங்கி - News View

About Us

About Us

Breaking

Friday, July 7, 2023

பண வீக்க வீழ்ச்சியை அடுத்து வட்டி வீதங்களை மேலும் குறைத்தது இலங்கை மத்திய வங்கி

(நா.தனுஜா)

அண்மைய காலங்களில் பண வீக்கத்தில் மிக வேகமான வீழ்ச்சி அவதானிக்கப்பட்டதன் விளைவாக, வைப்புக்கள் மற்றும் கடன்களுக்கான வட்டி வீதங்கள் முறையே 11 மற்றும் 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் இவ்வருடத்துக்கான ஐந்தாவது கூட்டம் நேற்று புதன்கிழமை (5) நடைபெற்றது. இக்கூட்டத்திலேயே கொள்கை வட்டி வீதங்களை மேலும் 200 அடிப்படைப் புள்ளிகளால் குறைப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, இதுவரை முறையே 13 சதவீதமாகவும், 14 சதவீதமாகவும் காணப்பட்ட துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன் வசதி வீதம் என்பன மேலும் 200 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 11 சதவீதம் மற்றும் 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளன.

எதிர்பார்க்கப்பட்டதை விடவும் மிகத்துரிதமான பண வீக்க வீழ்ச்சி உள்ளிட்ட அண்மையகால நிலைவரம் மற்றும் எதிர்பார்க்கப்படும் முன்னேற்றங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன் இதனூடாக நடுத்தர காலத்தில் பண வீக்கத்தை ஓரிலக்கப் பெறுமதிக்குக் கொண்டுவருவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே, இந்த நாணயக் கொள்கைத் தளர்வின் ஊடாகக் கிடைக்கப் பெறும் நன்மையை பொதுமக்களுக்கும் வணிகங்களுக்கும் பெற்றுக் கொடுக்குமாறு வங்கி மற்றும் நிதியியல் துறையிடம் மத்திய வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும், பண வீக்கம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதாகவும், நடுத்தர காலத்தில் பண வீக்கம் ஓரிக்கப் பெறுமதியை எட்டும் என எதிர்பார்ப்பதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இறுக்கமான நாணய மற்றும் நிதிக் கொள்கையினால் தூண்டப்பட்ட இப்பண வீக்க வீழ்ச்சி செயன்முறை உணவு மற்றும் எரிபொருள் விலைகளில் வீழச்சியை ஏற்படுத்தக்கூடுமெனவும் மத்திய வங்கி எதிர்வுகூறியுள்ளது.

அதேபோன்று உள்ளகப் பொருளாதார செயற்பாடுகள் இவ்வருடத்தின் பிற்பகுதியில் படிபடிப்படியாக மீட்சியடையும் என்றும், அது நடுத்தர காலத்தில் பொருளாதாரம் அதன் இயலுமைக்கேற்ப உச்ச வளர்ச்சியை அடைந்துகொள்ள உதவும் என்றும் சுட்டிக்காட்டியுள்ள மத்திய வங்கி, வெளிநாட்டுத் துறையின் மீண்டெழும் தன்மையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் இது உள்ளகப் பொருளாதார மீட்சி செயன்முறைக்குக் குறிப்பிடத்தக்களவில் பங்களிப்புச் செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

குறிப்பாகக் கடந்த மே மாதத்துடன் முடிவுக்கு வந்த 5 மாத காலப்பகுதியில் வர்த்தகப்பற்றாக்குறை குறிப்பிடத்தக்களவால் வீழ்ச்சியடைந்துள்ளது. அத்தோடு உள்ளக வெளிநாட்டு நாணயமாற்று சந்தையின் திரவத்தன்மை நிலையும் கடந்த சில மாதங்களாக முன்னேற்றமடைந்துவருகின்றது.

அதன்படி, இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி சுமார் 19 சதவீதத்தினால் உயர்வடைந்திருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment