ஜுலை 16 முதல் சென்னை - யாழ்ப்பாண விமான சேவை இடம்பெறும் : ஜனாதிபதி ரணில் மறக்க முடியாத ரயில் பயணத்தை ஏற்பாடு செய்திருந்தார் - இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே - News View

About Us

About Us

Breaking

Friday, July 7, 2023

ஜுலை 16 முதல் சென்னை - யாழ்ப்பாண விமான சேவை இடம்பெறும் : ஜனாதிபதி ரணில் மறக்க முடியாத ரயில் பயணத்தை ஏற்பாடு செய்திருந்தார் - இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே

“இந்த மாநாட்டிற்கு இலங்கை ஜனாதிபதி வருகை தந்ததை மிகவும் பாராட்டுகின்றேன். கடந்த வார இறுதியில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கையின் மிக அழகான சில பகுதிகள் வழியாக மறக்க முடியாத ரயில் பயணத்தை ஏற்பாடு செய்திருந்தார். அதில் நான் உட்பட ஒரு குழுவினர் கலந்துகொண்டோம் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (06) நடைபெற்ற இந்திய சுற்றுலா சம்மேளன நிகழ்வில் உரையாற்றும்போதே இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் அழைப்பின் பேரில் இந்திய சுற்றுலா சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு “எல்லைகளைக் கடந்து - வாழ்வை மாற்றும்” என்ற தொனிப்பொருளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜூலை 06 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

இலங்கை பாதுகாப்பான மற்றும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளம் என்பதை உலகுக்கு அறிமுகப்படுத்த நடத்தப்படும் இந்த மாநாட்டில், இந்திய சுற்றுலாப் பயண முகவர் சம்மேளத்தைச் சேர்ந்த சுமார் 500 பேர் கலந்துகொண்டுள்ளன. இதில் செய்தி சேகரிப்பதற்காக சுமார் 50 இந்திய ஊடகவியலாளர்கள் வருகை தந்திருந்தமை விசேட அம்சமாகும்.

இந்த மாநாட்டில் உரையாற்றிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இலங்கையின் மூடுபனியுடன் கூடிய காடுகள், மலைநாடு, அழகிய நிலப்பரப்புகளின் ஊடாக அழகிய பயணத்தை நினைவுபடுத்துவதற்காக மட்டும் நான் இதனைக் குறிப்பிடவில்லை. அங்கே எனக்கு இரண்டு விடயங்கள் நினைவுக்கு வந்தது. அவற்றில் ஒன்று, இந்தியாவில் இருந்து வருகை தந்து, இங்கு இருப்பவர்களுக்கு நன்கு தெரிந்த பகுதிகள்.

இது, வசூரி மற்றும் நீலகிரி பகுதிகளுக்கான பாதையை நினைவுபடுத்துகிறது. வசூரி போன்ற வெப்பநிலை உள்ள இப்பகுதியில் அமைந்துள்ள இந்த ரயில் பயணத்தில் இருபுறமும் தேயிலை தோட்டங்கள் இருப்பதால், நீலகிரி நோக்கி பயணிப்பதை இந்திய மக்களுக்கு இது நினைவூட்டுகிறது.

அந்த ரயில் பயணத்தில் உலகப் புகழ்பெற்ற ஒன்பது வளைவுப் பாலம், புகழ்பெற்ற எல்ல ஆகிய இடங்களை அடைந்தபோது, என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. இப்பகுதி, சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியாக மாறியுள்ளது. அந்த அளவுக்கு ரம்மியமாக இருக்கிறது. இந்தியா, இலங்கை மற்றும் பிற நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அங்கு வருகை தந்திருந்தனர்.

ஜனாதிபதி அவர்களே, நீங்கள் இங்கு வருகை தந்திருப்பதை இந்தியா மற்றும் இலங்கை மக்களின் சுபீட்சத்துக்கான நெருக்கமான மற்றும் ஒத்துழைப்பு நடவடிக்கையாக நான் பார்க்கிறேன்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு வலுவான சகோதர உறவு. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான புவியியல் நெருக்கம் பற்றி நாம் அனைவரும் அறிவோம். இரு நாடுகளுக்கும் இடையே பல ஆயிரம் ஆண்டுகளாக நிலவும் இந்த புவியியல் நெருக்கம், வரலாறு, கலாசாரம், நாகரிகம், மதங்கள், மொழிகள், இசை, சினிமா, கிரிக்கெட் விளையாட்டு, ஜனநாயகம், பன்முகத்தன்மை, மரியாதை மற்றும் அமைதி ஆகியவற்றுக்கு சான்று பகர்கின்றது.

இந்த மாநாட்டை நடாத்துவதற்கு ஆதரவு வழங்கிய சுற்றுலாத்துறை அமைச்சருக்கும் அதற்கு தலைமை தாங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் எனது விசேட நன்றிகளை தெரிவித்துக் கொள்ள வேண்டும்.

கடந்த சில மாதங்களாக வாரத்திற்கு நான்கு முறை இயக்கப்பட்ட சென்னை - யாழ்ப்பாண விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பது மட்டுமன்றி, இந்த விமான சேவையை ஜூலை 16 ஆம் திகதி முதல் நாள் தோறும் இயக்க எமக்கு முடிந்தது. இரு நாடுகளுக்கு இடையே பல தசாப்தங்களாக இயங்காமல் இருந்த படகு சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் சர்வதேச கப்பல் தொடர்பான யோசனை தொடர்ந்தும் வெறும் யோசனையாக மாத்திரம் இருக்காது என்றே கூற வேண்டும்.

இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் பணம் செலுத்துவதற்கு தங்கள் சொந்த நாணயத்தைப் பயன்படுத்த முடியும் என்பதால், இலங்கையில் இந்திய நாணயத்தைப் பயன்படுத்துவது சுற்றுலாவுக்கு ஊக்கமளிக்கிறது. இரு நாடுகளுக்கு இடையே டிஜிட்டல் கொடுப்பனவுகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதோடு, எல்லைகளைத் தாண்டி வாழ்க்கையை மாற்றுவது மட்டுமன்றி, நமது பொதுவான பாரம்பரியத்தை கட்டியெழுப்பவும் காரணமாக அமையும்.“ என்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தெரிவித்தார்.

துறைமுகங்கள், கப்பல்துறை, விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இந்திய சுற்றுலா முகவர் சங்கத்தின் தலைவர் ஜோதி மாயல் உள்ளிட்ட பலர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment