(எம்.மனோசித்ரா)
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை விரைவில் வெளியிட எதிர்பார்த்துள்ளோம். பரீட்சைகளின்போது முறைகேடாகவும், விடையளிக்கும்போது மோசடியாகவும் செயற்பட்ட மாணவர்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
பரீட்சை திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. மே மாதம் 29ஆம் திகதி முதல் 9 நாட்கள் பரீட்சைகள் இடம்பெற்றன.
சில பாடசாலைகளில் முறைகேடான வகையில் நடந்து கொண்ட மாணவக் குழுக்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விசாரணைகளின் அடிப்படையில் குறித்த மாணவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோன்று சில மாணவர்கள் வினாக்களுக்கு பதிலளிக்கும்போது மோசடியில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. அது தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவற்றுடன் வெளிநபர்கள் தொடர்புபட்டிருந்தால், அவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு அந்தந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வெகுவிரைவில் சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளோம். தற்போது உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளும் இடம்பெற்றுவருவதால், ஏற்கனவே திட்டமிட்டபடி சாதாரண பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை ஆரம்பிக்க முடியாத நிலைமை காணப்படுகிறது.
எவ்வாறிருப்பினும் விரைவில் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை ஆரம்பித்து, பெறுபேறுகளை வெளியிட வேண்டும் என்பதே எமது எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
No comments:
Post a Comment