(எம்.வை.எம்.சியாம்)
நாட்டில் தற்போதுள்ள இளைஞர் சமூகத்தினர் முன்னெப்போதுமில்லாத சவால்களையும், நெருக்கடிகளையும் எதிர்கொண்டுள்ளதாகவும் இந்த நெருக்கடி நிலைமைக்கு வெற்றிகரமான தீர்வுகளை வழங்கி இக்கட்டான சூழ்நிலையிலிருந்து இளைஞர் சமூகத்தினரை விடுப்பதற்காக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
சனிக்கிழமை (17) அலரி மாளிகையில் நடைபெற்ற சர்வதேச ரோட்டரி அமைப்பின் 33 ஆவது மாவட்ட சமூக சம்மேளன நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, இரண்டாம் உலகப்போரின்போது நாங்கள் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது போன்று இன்று நமது இளைஞர் சமூகமும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. அவர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த நெருக்கடிகளிலிருந்து மீண்டெழ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அதற்கான முறையான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
மேலும், ரோட்டரி போன்ற அமைப்புகளின் இவ்வாறான பரந்துபட்ட சமூக செயற்பாடுகள் மூலம் இளைஞர் சமூகத்தினருக்கு மற்றவர்களுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைக்கிறது. பரஸ்பர புரிதலை விரிவுப்படுத்தும் இதுபோன்ற திட்டங்கள் மிகவும் முக்கியமானவையாகும்.
இவ்வாறான பரந்துபட்ட சமூகத்தினருடன் இணைந்து பயணிக்கும்போது பல்வேறு பின்னணியில் உள்ளவர்கள், பல்வேறு விதமான கலாச்சாரங்களை மற்றும் மதங்களை சார்ந்தவர்களுடன் புரிந்துணர்வை மேம்படுத்த அது வழிவகுக்கும்.
நெருக்கடிக்குள் சிக்குண்டு மன ரீதியாக பாதிக்கப்பட்ட மற்றும் குழப்பங்களுக்கு முகங்கொடுத்துள்ளவர்களுக்கு இவ்வாறான செயற்பாடுகள் மாற்றத்தை ஏற்படுத்தும்.
மேலும், நாடளாவிய ரீதியிலுள்ள சிறுவர் பராமரிப்பு இல்லங்கள், அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள், பொது இடங்கள் என்பவற்றை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டிய சமூக பொறுப்பு எமக்குள்ளது.
பெரும்பான்மையான மக்களின் அறியாமை மற்றும் தான்தோன்றித்தனமாக செயற்பாடுகள் காரணமாக இவ்வாறான பொது இடங்கள் இன்று அச்சுறுதத்லுக்குள்ளாகியுள்ளது.
சமூகங்களுக்கிடையிலான செயற்பாடுகள் ஆக்கபூர்வமான தலைமைத்துவத்தையும், தனிப்பட்ட ஒருமைப்பாட்டையும் வழங்குகிறது. மேலும், தமது குடும்பத்தின் முக்கியத்துவத்தையும் மற்றவர்களுக்கு உதவுவதையும் வளர்க்கிறது என்றார்.
No comments:
Post a Comment