நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ் 11 நிறுவனங்கள் உள்ளடக்கப்பட்டு, விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா டெலிகொம், நோர்த் சீ, திரிபோஷா நிறுவனம், தேசிய உப்பு நிறுவனம், சீமெந்து கூட்டுத்தாபனம், அரச பொறியியல் கூட்டுத்தாபனம், கொழும்பு லோட்டஸ் டவர் முகாமைத்துவ தனியார் கம்பனி, கல்லோய பெருந்தோட்ட தனியார் கம்பனி, பரந்தன் கெமிக்கல்ஸ் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட 11 நிறுவனங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள், வங்கி, கட்டடக் கலைஞர்கள் உள்ளிட்ட சில துறைசார்ந்தவர்கள் நேற்று முதல் தேசிய வருமான வரி திணைக்களத்தில் பதிவு செய்யப்படுவது கட்டாயமெனவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
நிதி, பொருளாதார, மறுசீரமைப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.
தேசிய வருமான வரி ஆணையாளரிடம் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டியவர்கள் தொடர்பில் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதற்கமைய இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்ட வைத்தியர்கள், பட்டயக் கணக்காளர் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள், சான்றுப்படுத்தப்பட்ட முகாமைத்துவக் கணக்காய்வாளர் நிறுவன உறுப்பினர்கள், பொறியியலாளர் நிறுவன உறுப்பினர்கள், வங்கியாளர் சங்கத்தின் உறுப்பினர்கள், இலங்கை கட்டடக் கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், தரநிர்ணய மதிப்பீட்டு நிறுவனத்தின் உறுப்பினர்கள், உச்ச நீதிமன்ற சட்டத்தரணிகள், பிரதேச செயலாளரின் கீழ் வர்த்தகங்களை பதிவு செய்துள்ள நபர்கள், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் வாகனங்களை பதிவு செய்துள்ள நபர்கள் (முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள், சிறிய உழவு இயந்திரம்) சொத்துக்கள் கொள்வனவு செய்து அல்லது கைப்பற்றப்பட்டுள்ள உறுதிப்பத்திரங்களை பரிமாற்றம் செய்துள்ள நபர்கள், மாதாந்தம் 1,00,000 அல்லது வருடாந்தம் 12,00,000 கொடுப்பனவு பெற்றுக் கொள்வோரும் இதில் உள்ளடங்குகின்றனர்.
இதற்கு மேலதிகமான 2023 டிசம்பர் 31ஆம் திகதி 18 வயதைப் பூர்த்தி செய்துள்ள அல்லது 2024 ஜனவரி 01ஆம் திகதி அல்லது அதற்குப் பின்னர் 18 வயதாகும் அனைத்து நபர்களும் இந்த புதியமுறைமைக்குள் உள்ளடங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment