சப்ரகமுவ மாகாண ஆளுநர் இராஜினாமா : கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, June 8, 2023

சப்ரகமுவ மாகாண ஆளுநர் இராஜினாமா : கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு

சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்யும் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

எதிர்வரும் ஜூன் மாதம் 10ஆம் திகதி முதல் குறித்த பதவியிலிருந்து விலகுவதாக, தனது இராஜினாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான கடிதம் கிடைத்துள்ளதாக, ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், சப்ரகமுவ மாகாண ஆளுநராக டிக்கிரி கொப்பேகடுவ நியமிக்கப்பட்டிருந்தார்.

அதற்கு முன்னர் முன்னாள் ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் 2005 - 2015 வரை மத்திய மாகாண ஆளுனராகவும் பதவி வகித்திருக்கின்றார்.

முன்னதாக, வடக்கு, கிழக்கு, வடமேல், சப்ரகமுவ, ஊவா மாகாண ஆளுநர்களை பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், கடந்த மே மாதம் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வடக்கு, கிழக்கு, வடமேல் மாகாணங்களின் ஆளுநர்களாக செயற்பட்ட ஜீவன் தியாகராஜா, அநுராதா யஹம்பத், வசந்த கரன்னாகொட ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் 17ஆம் திகதி, வட மாகாண ஆளுநராக திருமதி பீ.எஸ்.எம். சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான், வடமேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment