(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் எந்த வகையிலும் அரசியலமைப்புக்கு முரணானதல்ல. அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரத்தை பாதுகாத்து, பலப்படுத்துவதே இதன் முக்கியமான நோக்கமாகும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும எம்பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், தற்போது தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தின் முக்கிய நோக்கமானது முதலாவதாக அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரத்தை பாதுகாத்தல். இரண்டாவதாக சரியான தகவலை அறிந்து கொள்வதற்கான உரிமையை பாதுகாத்தல் என்ற அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த விடயத்தை மேலும் பலப்படுத்துவதாகும். இந்த அடிப்படையிலேயே இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதன் மூலம் மக்கள் சரியான தகவலை பெற்றுக் கொள்வதற்கான உரிமை கிடைக்கின்றது. அதேபோன்று எவராவது தவறான செய்தியை வெளியிட்டால் அரசாங்கத்தின் மூலமாக அது தொடர்பில் ஒழுங்குபடுத்தல் அவசியமாகிறது. இதனை ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஏற்றுக் கொள்கின்றது.
அதேபோன்று கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட சுயாதீன ஊடக ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சுயாதீன ஒழுங்குபடுத்தலொன்றை தயாரிப்பது தொடர்பில் தசாப்த காலமாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது. எனினும் இதுவரை சம்பந்தப்பட்டோரின் ஒத்துழைப்புடன் அதற்கான ஒழுங்குபடுத்தலொன்றை முன்னெடுக்க முடியாத நிலையையே காண முடிகிறது.
அதன் காரணமாகவே தற்போது அதனை தயாரித்து அது ஒளிபரப்பாளர்களின் சங்கத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் வரைபு ஒன்றை தயாரித்து சுயாதீனமான ஒழுங்குபடுத்தலுக்கான சட்ட நியமங்களை உருவாக்கி அதற்கு சட்ட ரீதியான அதிகாரத்தை வழங்குவதே இந்த சட்டத்தின் மூலமான அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு.
எவ்வாறெனினும் இந்த சட்டமூலத்தில் எந்த வகையிலும் இதில் உள்ளடக்கப்படும் எந்த சரத்திலும் சட்டம் தொடர்பாக குறிப்பிடப்படவில்லை. அந்த வகையில் அது தொடர்பில் அவர்களுக்குத் தீர்மானிக்க முடியும்.
உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானத்துக்கு முரணில்லாத வகையிலேயே இதில் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் அரசியலமைப்பை மீறும் எந்த விடயங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லை.
இது தொடர்பான விவாதம் அவசியமென்பதால் சம்பந்தப்பட்ட ஒளிபரப்பாளர்கள் சங்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் நேரடியாகவும் எழுத்து மூலமாகவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஊடக ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் தொடர்பாக ஆராயும் குழுவின் அங்கத்தவர் என்ற வகையில் இந்த விடயங்களை என்னால் சபையில் குறிப்பிட முடியும் என்றார்.
No comments:
Post a Comment