ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் திருடன் கையில் சாவியைக் கொடுத்ததுபோல் அமைந்து விடக்கூடாது : பாடத்திட்டத்துக்குள் உள்வாங்கப்பட வேண்டும் என்கிறார் உதயகுமார் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 21, 2023

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் திருடன் கையில் சாவியைக் கொடுத்ததுபோல் அமைந்து விடக்கூடாது : பாடத்திட்டத்துக்குள் உள்வாங்கப்பட வேண்டும் என்கிறார் உதயகுமார்

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

அரசியல் நோக்கமற்ற வகையில் இதய சுத்தியுடன் சிறந்த முறையில் ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றப்படுமாயின் அதற்கு இரு கைகளையும் உயர்த்தி ஆதரவு வழங்குவோம். இந்த சட்டமூலம் திருடன் கையில் சாவியைக் கொடுத்ததுபோல் அமைந்து விடக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்ற ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, ஊழல் மோசடியால்த்தான் இலங்கை,பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பொருளாதார ரீதியில் தற்போது பாரிய நெருககடிகளை எதிர்கொண்டுள்ளன. ஒரு நாடு ஊழலற்ற நாடாக மாறும் போது நாடும், நாட்டு மக்களின் வாழ்க்கையும் வளம் பெறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

'இலஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்' என்பதற்கு இணங்க நாட்டு மக்கள் அனைவரும் பொறுப்புடன் செயற்பட்டால் ஊழலை முழுமையாக இல்லாதொழிக்கலாம்.

ஊழல் எதிர்ப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சமவாய ஒப்பந்தத்தில் இலங்கை 2004 ஆம் ஆண்டு மே மாதம் கைச்சாத்திட்டது. ஆகவே ஊழல் ஒழிப்பு தொடர்பில் இலங்கைக்கு பாரிய பொறுப்பும், கரிசணையும், கடப்பாடும் காணப்படுகிறது. ஊழல் ஒழிப்புக்கு தேவையான சட்டங்கள் துரிதமாக இயற்றப்பட வேண்டும்.

அரசியல் நோக்கமற்ற வகையில் இதயசுத்தியுடன் சிறந்த நோக்கத்துடன் ஊழல் எதிர்ப்புச் சட்டம் நிறைவேற்றப்படுமாயின் அதற்கு இரு கைகளையும் உயர்த்தி முழுமையாக ஆதரவு வழங்குவோம்.

சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் முன்வைத்துள்ள அறிவுறுத்தல்கள், சிவில் தரப்பினர், அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ள திருத்தங்கள் சட்டமூலத்தில் உள்வாங்கப்பட வேண்டும்.

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் தகவலறியும் உரிமைச் சட்டத்தை அப்பாற்பட்டுள்ளதாக ட்ரான்ஸ்பேரன்ஸி அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஆகவே இவ்விடயம் தொடர்பில் நீதியமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

அரசியல் மற்றும் தனிப்பட்ட நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்படும் பொய்யான தகவல்கள் தொடர்பில் சட்டமூலத்தில் கடுமையாக ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.

ஆகவே ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் திருடன் கையில் சாவி கொடுத்தது போல் அமைந்து விடக்கூடாது. நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கு அமைய ஊழலுக்கு எதிராக செயற்படும் கருவியாக அமைய வேண்டும். 

ஊழல் ஒழிப்பு தொடர்பிலான விடயங்கள் பாடசாலை பாடத்திட்டத்துக்குள் உள்வாங்கப்பட வேண்டும் என்பதை கல்வி அமைச்சிடம் வலியுறுத்துகிறேன் என்றார்.

No comments:

Post a Comment