(எம்.மனோசித்ரா)
பாராளுமன்றத்தில் எந்தக்கட்சிக்கு 50 சதவீத வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை தேர்தலை நடத்தி அதன் ஊடாக அறிந்து கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் தெரிவித்துக் கொள்கின்றோம். முடிந்தால் இவ்வாண்டுக்குள் ஜனாதிபதித் தேர்தலை நடத்திக் காட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சவால் விடுத்துள்ளார்.
உத்தகந்த - சதாநீலகம பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (04) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், இலட்சக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து தமது துயரங்களுக்கு காரணமான கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டோரை எவ்வித அச்சமும் இன்றி ஆட்சியிலிருந்து துரத்தியடித்தனர். மக்கள் தேர்தலை நம்பவில்லை என்று ஜனாதிபதி புதுமையானதொரு கருத்தை தெரிவித்திருக்கின்றார்.
ஜனாதிபதியின் இந்தக் கருத்து எனக்கு ஆச்சர்யமளிக்கிறது. ஆனால் ஜனாதிபதிக்கு இது புதிய விடயமாகத் தோன்றுவதற்கு வாய்ப்பில்லை. தேர்தலை நடத்துவதில் அவருக்கு விருப்பமின்மை காணப்படலாம். காரணம் தேர்தல் பெறுபேறுகள் அவருக்கு பாதகமானவையாகவே அமையும் என்பதை அவர் அறிவார்.
பாராளுமன்றத்திலுள்ள அரசியல் கட்சிகளுக்கு நூற்றுக்கு 50 சதவீதம் கூட வாக்குகளைப் பெற முடியாது என ஜனாதிபதி குறிப்பிடுகின்றார். அவரால் எவ்வாறு அவ்வாறு கூற முடியும்? நூற்றுக்கு 50 சதவீதம் பெற முடியுமா இல்லையா என்பதை அடுத்த வருடம் நடத்த வேண்டிய ஜனாதிபதித் தேர்தலை இவ்வாண்டிலேயே நடத்தி அறிந்து கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு சவால் விடுக்கின்றோம். அதற்கான சட்ட திருத்தங்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி முழுமையான ஆதரவை வழங்கும்.
முடிந்தால் ஜனாதிபதித் தேர்தலை நடத்திப் பாருங்கள். யாருக்கு 50 சதவீதம் காணப்படுகிறது என்பது தெரியும். தேர்தலுக்கான நிதியை விடுவிக்காது, அவரே இளைஞர்கள் தேர்தலை விரும்பவில்லை எனக் குறிப்பிடுகின்றார். ஜனாதிபதித் தேர்தலுக்கு நாம் எந்தச் சந்தர்ப்பத்திலும் தயாராகவே உள்ளோம். 134 ராஜபக்ஷவாதிகளின் ஜனாதிபதியாக நான் விரும்பவில்லை என்றார்.
No comments:
Post a Comment