(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)
புலம்பெயர் பிரிவினைவாதிகளின் முகவராகவும், கூலியாளாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் செயற்படுகிறார். பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்திக் கொண்டு வேண்டிய பொய்யை குறிப்பிட முடியாது. கோட்டபய ராஜபக்ஷவுக்கு நான் இல்லம் வழங்கினேன் என்பது அடிப்படையற்றது. ஆகவே அவரது கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, வெளிநாட்டு சக்திகளின் கூலியாள் ஒருவர் பாராளுமன்றத்தில் உள்ளார். அவர் சாணக்கியன் இராசமாணிக்கம் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் செயற்பாடுகளுக்கு இவர் விருப்பமில்லை.
பிரச்சினைகளை நீடித்து அதனூடாக இலாபமடைவதை நோக்கமாக கொண்டுள்ளார். பிரச்சினைகளுக்கு தீர்வு காண எவரேனும் நடவடிக்கை எடுக்கும்போது அதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
இனப் பிரச்சினைக்கு தீர்வு காண நான் செயற்படும்போது சர்வதேச சக்திகள் அவருக்கு ஆலோசனை வழங்குகின்றன. இவர் அவர்களின் கூலியாள் அதனை தொடர்ந்து பாராளுமன்றத்தில் கடுமையாக கருத்துக்களை முன்வைக்கிறார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நான் இல்லம் கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். நான் எவ்வாறு அவருக்கு வீடு வழங்க முடியும்.
தொழிலுக்காக நான் அரசியலுக்கு வரவில்லை. சொந்த உழைப்பில் கட்டிய வீட்டில்தான் நான் வாழ்கிறேன். ஒரு நாள் கூட அரசாங்கத்தின் இல்லத்தில் வாழவில்லை.
அரச முறை நடவடிக்கைகளுக்காக மாத்திரம் முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ் பயன்படுத்திய வீட்டை பயன்படுத்துகிறேன்.
குறுகிய அரசியல் நோக்கத்துக்காக கீழ்த்தரமான கருத்துக்களை குறிப்பிடுவது முறையற்றது. அனைவருக்கும் சுய கௌரவம் என்பதொன்று உள்ளது.
பாராளுமன்ற சிறப்புரிமைகளுக்குள் இருந்துகொண்டு முறையற்ற விடயங்களை குறிப்பிட முடியாது. பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சர்வதேசத்தின் முகவராக செயற்படுகிறார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டபய ராஜபக்ஷ ஆகியோர் 30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்கள்.
நாட்டை அபிவிருத்தி செய்தார்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாது. கடந்த காலங்களில் எடுத்த ஒரு சில தீர்மானங்களினால் நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.
குரைக்கும் நாயை நோக்கி கல்லெறிந்து கொண்டிருந்தால் சிறந்த இலக்கை நோக்கி பயணிக்க முடியாது. ஆகவே பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குறிப்பிட்ட கருத்துக்கள் அடிப்படையற்றது. நாங்கள் எமது பயணத்தை சிறந்த முறையில் வெற்றி கொள்கிறோம்.
நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப் பிரச்சினைக்கு தீர்வு கண்டு தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவோம். புலம்பெயர் பிரிவினைவாத நோக்கத்துடன் செயற்படும் தரப்பினரின் அச்சுறுத்தலுக்கும், சேறுபூசலுக்கும் அச்சமடையப் போவதில்லை என்றார்.
No comments:
Post a Comment