வெளியக சுய நிர்ணயத்தைக் கோரும் நிலைமை ஏற்படும் : சம்பந்தன் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 10, 2023

வெளியக சுய நிர்ணயத்தைக் கோரும் நிலைமை ஏற்படும் : சம்பந்தன்

தமிழ் மக்கள் உள்ளக சுய நிர்ணய அடிப்படையில் தமது அபிலாஷைகளை பூர்த்தி செய்து கொள்வதையே விரும்புகின்ற நிலையில், இழுத்தடிப்புக்கள் மூலமான தீர்வினை நீர்த்துப் போகச் செய்வதற்கு முயன்றால் வெளியக சுய நிர்ணயத்தைக் கோரும் நிலைமை ஏற்படும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் கடந்த வியாழக்கிழமை நடத்திய பேச்சுவார்த்தை, அதோடிணைந்த எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் நாம் முழுமையான திருப்தியைக் காணவில்லை. இருப்பினும் அவர்களின் கூற்றுப்படி எடுக்கப்படும் முயற்சிகளுக்கு நாம் ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தயாராகவே உள்ளோம்.

இருப்பினும், அரசியல் தீர்வுக்கான நடவடிக்கைளை கடந்த பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்னதாக ஜனாதிபதி முன்னெடுப்பதாக கூறியிருந்தார். எனினும் அது தொடர்பில் இன்னமும் ஆக்கபூர்வமான கருமங்கள் முன்னெடுக்கப்படவில்லை.

தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் தமது அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்காக நீண்ட காலமாக போராடி வருகின்றார்கள். அவர்கள் வடக்கு, கிழக்கில் சரித்திரபூர்வமாக வாழ்ந்து வருபவர்கள். ஆகவே அவர்கள் சுய நிர்ணய உரித்தினைக் கொண்டுள்ளார்கள். அவர்கள் தங்களைத் தாங்களே ஆளுகின்ற வகையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்கள்.

அதன் பிரகாரம் அரசாங்கம் பிரிக்க முடியாத, பிளவுபடுத்தப்படாத ஐக்கிய இலங்கைக்குள் உள்ளக சுய நிர்ணய அடிப்படையில் நியாயமான, நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை வழங்க வேண்டும்.

இந்த விடயத்தில் அரசாங்கம் தொடர்ச்சியாக காலத்தினை இழுத்தடித்துச் செல்ல முடியாது. இவ்வாறான நிலைமை தொடர்வதன் ஊடாக தேசிய இனப்பிரச்சினை விவகாரத்தினை நீர்த்துப் போகச் செய்ய முடியும் என்று கருதலாம்.

ஆனால், தமிழ் மக்களுக்கான உள்ளக சுய நிர்ணய உரிமை மறுக்கப்படும் பட்சத்தில் வெளியக சுய நிர்ணய உரிமையைக் கோருவதற்கான நிலைமையே ஏற்படும். இதற்கான, ஏற்பாடுகள் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சட்டங்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே அவ்விதமானதொரு சூழல் ஏற்படுவதற்கு அரசாங்கம் இடமளிக்காது. கருமங்களை விரைந்து முன்னெடுக்க வேண்டும். அரசியல் தீர்வு சம்பந்தமான விடயம் அரசாங்கத்தின் கைகளில்தான் உள்ளது. ஆகவே அரசாங்கம் இதய சுத்தியுடன் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். அந்தச் செயற்பாட்டிலிருந்து விலகி நிற்கமுயாது என்றார்.

No comments:

Post a Comment