ஆங்கில ஆசிரியர் போட்டிப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுங்கள் : கிழக்கு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ள இம்ரான் எம்.பி - News View

About Us

About Us

Breaking

Friday, June 9, 2023

ஆங்கில ஆசிரியர் போட்டிப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுங்கள் : கிழக்கு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ள இம்ரான் எம்.பி

கிழக்கு மாகாணத்தில் உயர் தேசிய ஆங்கில டிப்ளோமாதாரிகளை ஆங்கில ஆசிரியர்களாக உள்ளீர்ப்பதற்கான போட்டிப் பரீட்சை கடந்த 3 வருடங்களுக்கு முன் நடைபெற்றது. இந்தப் பரீட்சைப் பெறுபேறுகளை உடன் வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆளுநருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை ஆசிரியர் சேவை பிரமானக் குறிப்பின்படி உயர் தேசிய ஆங்கில டிப்ளோமாதாரிகள் (எச்என்டிஈ) ஆசிரியர்களாக உள்ளீர்க்கப்பட்டு ஆசிரியர் தரம் 3.1 சீ யில் உள்வாங்கப்படுகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்திக்கும் பொருட்டு எச்.என்.டி.ஈ தகைமையுள்ளோரிடமிருந்து கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் விண்ணப்பம் கோரப்பட்டு அதற்கான போட்டிப் பரீட்சையும் கடந்த 3 வருடங்களுக்கு முன் நடத்தப்பட்டது. எனினும், இதற்கான பெறுபேறு இதுவரை வெளியிடப்படவில்லை.

இதனால் இப்பரீட்சைக்குத் தோற்றியோர் பெரும் கவலையோடு உள்ளனர். இதனைத் தவிர ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறையும் இன்னும் நிவர்த்திக்கப்படாமல் உள்ளது.

எனவே, இவற்றைக் கவனத்திற்கெடுத்து 3 வருடங்களுக்கு முன் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்குமாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment