யாழ் - கிளிநொச்சி காணிகளை விரைவில் விடுவிக்க புதியதொரு நகர்வு : அமைச்சர்களான டக்ளஸ், பவித்ரா சந்திப்பில் இணக்கம் - News View

About Us

About Us

Breaking

Friday, June 9, 2023

யாழ் - கிளிநொச்சி காணிகளை விரைவில் விடுவிக்க புதியதொரு நகர்வு : அமைச்சர்களான டக்ளஸ், பவித்ரா சந்திப்பில் இணக்கம்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் வனவளப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் போன்ற திணைக்களங்களினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள காணிகளில் கணிசமானவற்றை விரைவில் விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் (08) பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற வன வளப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் அமைச்சு அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டு மக்களுக்கு அவசியமாகவுள்ள உணவுப் பாதுகாப்பு, போஷாக்கு மற்றும் வாழ்வாதாரம் என்பவற்றை உயர்த்துவதற்கு வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பூர்வீகமான மக்கள் குடியிருப்புக்கள் மற்றும் விவசாய, நீர்வேளாண்மை உற்பத்திகளுக்கு ஏதுவான பிரதேசங்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்று இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்டது.

1985 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் மக்கள் குடியிருப்புக்களாகவும் விவசாய நிலங்களாகவும் விளங்கிய பிரதேசங்கள் வனவளப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களினால் அடையாளப்படுத்தப்பட்டிருப்பின் அவை அனைத்தும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற ஜனாதிபதியின் நிலைப்பாட்டினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியதுடன், அடையாளப்படுத்தப்பட்ட காணிகளில் கணிசமானவை விவசாய நிலங்களாகவும் குடியிருப்புக்களாகவும் இருந்தமைக்கான ஆவண ரீதியான ஆதாரங்களும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான அதிகாரிகளினால் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், வனப் பகுதிகளும் வனஜீவராசிகளும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாக இருக்கின்ற போதிலும், விவசாய மற்றும் நீர்வேளாண்மை உற்பத்தியின் அவசியம் கருதியும் மக்களின் அபிலாசைகளை கருத்தில் கொண்டும், கணிசமானளவு காணிகளை விடுப்பதற்கான நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, மன்னார் விடத்தல்தீவு பகுதியில் நீர்வேளாண்மைக்கு பொருத்தமான இடங்களை விடுவிப்பதற்கு தேவையான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்து அதனை விடுவிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்ததுடன் கடற்றொழில் அமைச்சினால் நீர்வேளாண்மைக்கு அவசியானவை என்று கோரிக்கை முன்வைக்கப்பட்ட பகுதிகளுள் சிலவற்றுக்கான இறுதித் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது, சுற்றாடல் அமைச்சின் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்வது பொருத்தமானது என்பதால், விரைவில் சுற்றாடல் அமைச்சு அதிகாரிகளையும் உள்ளடக்கிய கலந்துரையாடலை ஏற்பாடு செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில், கடற்றொழில் அமைச்சு மற்றும் வனவளப் பாதுகாப்பு, வனஜீவராசிகள் அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகள் ஆகியோருடன் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.முரளீதரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) திருலிங்கநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment