(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் நாளை திங்கட்கிழமை விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. நாளை மாலை 5.30 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
நாட்டில் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தம்மால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் எதிர்கொள்ள நேரிட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் தெளிவுபடுத்தவுள்ளனர்.
தற்போதுள்ள பிரச்சினைகளை தீர்த்து 113 பெரும்பான்மை பலத்தை பாதுகாத்து அரசாங்கத்தின் பணிகளை வலுவாக முன்னெடுத்துச் செல்வதும் இக்கலந்துரையாடலின் மற்றுமொரு நோக்கமாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கடந்த வாரம் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பில், கடந்த காலத்தில் இடம்பெற்ற அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின்போது தமது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டமை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமை குறித்து பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்த விசாரணைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் வழங்கிய உத்தரவாதத்துக்கு அமையவே, தாம் வழக்கினை மீளப் பெற்றதாகவும், எனினும், அதன் பின்னர் விசாரணைகளில் எந்தவொரு முன்னேற்றத்தையும் அவதானிக்க முடியவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, இது தொடர்பிலும் நாளைய சந்திப்பில் அவதானம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment