டயனா கமகே உப செயலாளர் பதவியில் இல்லை : என்னுடைய கையெழுத்தில் பாராளுமன்றம் வந்தவர் - ரஞ்சித் மத்தும பண்டார - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 7, 2023

டயனா கமகே உப செயலாளர் பதவியில் இல்லை : என்னுடைய கையெழுத்தில் பாராளுமன்றம் வந்தவர் - ரஞ்சித் மத்தும பண்டார

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளர் பதவியில் இல்லை. அவர் பதவி விலகியதாக கூறி முன்வைக்கப்பட்டுள்ள ஆவணம் போலியானது என்று கூறுவாராக இருந்தால் அதில் உள்ள கையெழுத்தை பரிசோதிக்குமாறு குற்றப் புலனாய்வு பிரிவிடம் கோருவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தின்போது இராஜாங்க அமைச்சர் டயனா கமகே முன்வைத்த கருத்தொன்று தொடர்பில் பதிலளிக்கையிலேயே ரஞ்சித் மத்தும பண்டார இவ்வாறு தெரிவித்தார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், நான் பாராளுமன்றத்தில் இல்லாத நேரத்தில் எனது பெயரை குறிப்பிட்டு பொய்யான தகவலை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே வெளியிட்டுள்ளார். நாங்கள் போலி ஆவணமொன்றை முன்வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த மூலப்பிரதி எங்களிடம் உள்ளது. அதில் உள்ளது அவரின் கையெழுத்தா என்று அரச இரசாயன பகுப்பாய்வு ஊடாக ஆராயுமாறு நாங்கள் சீஐடியினருக்கு கோரிக்கை விடுக்கின்றோம்.

அத்துடன் அவர் இன்னும் ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளராக இருப்பதாகவும் கூறியுள்ளார். அவ்வாறு அவர் உப செயலாளர் அல்ல. தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் உள்ள ஆவணத்தில் அவரின் பெயர் இல்லை அவரை நாங்கள் நீக்கியுள்ளோம்.

அத்துடன் ரஞ்சித் மத்தும பண்டார தேர்தலில் பாராளுமன்றம் வரவில்லை என்று கூறியுள்ளார். நான் தொடர்ந்து 10 தடவைகள் தேர்தலில் வெற்றியடைந்தவன்.

ஆனால் அவர்தான் என்னுடைய கையெழுத்தில் பாராளுமன்றம் வந்துள்ளார். என்னுடைய கையெழுத்து இல்லாவிட்டால் அவருக்கு பாராளுமன்றத்துக்கு வரமுடியாது.

அதனால் பொய்யான கருத்துக்களை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு கோருகின்றேன். அத்துடன் நாங்கள் செய்த பெரிய தவறு, போலி ஆவணங்களை தயாரிப்பவர்களின் கட்சியை எடுத்தமையாகும் என்றார்.

No comments:

Post a Comment