யூரியாவை 9,000 ரூபாவுக்கு வழங்க நடவடிக்கை : உர விற்பனையிலிருந்து அரசாங்கம் விலகாது - மஹிந்த அமரவீர - News View

About Us

About Us

Breaking

Thursday, June 8, 2023

யூரியாவை 9,000 ரூபாவுக்கு வழங்க நடவடிக்கை : உர விற்பனையிலிருந்து அரசாங்கம் விலகாது - மஹிந்த அமரவீர

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

உரங்களுக்கான நிவாரணங்களை அரசாங்கம் வழங்கி வரும் நிலையில் அடுத்த வாரம் முதல் யூரியா உரம் மூடையொன்றை 9,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானித்துள்ளோம். அத்துடன் தற்போது 19,500 ரூபாவாக விற்பனை செய்யப்படும் எம்.வி.பி உரம் மூடையொன்றுக்கு 4500 ரூபா விலைக் குறைப்புடன் 15,000 ரூபாவுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், உரங்களுக்கான நிவாரணங்களை அரசாங்கம் வழங்கி வரும் நிலையில் அடுத்த வாரம் முதல் யூரியா உரம் மூடையொன்றை 9,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானித்துள்ளோம்.

அத்துடன் தற்போது 19,500 ரூபாவாக விற்பனை செய்யப்படும் எம்.வி.பி உரம் மூடையொன்றுக்கு 4500 ரூபா விலைக் குறைப்புடன் 15,000 ரூபாவுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதேவேளை, உர நிவாரணமாக வழங்கப்படும் நிதியை அடுத்த போகம் முதல் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்போது விவசாயிகள் தமக்கு விருப்பமான இடத்தில் விருப்பமான உரங்களை கொள்வனவு செய்து கொள்ள முடியும்.

உர விற்பனை நடவடிக்கைகளிலிருந்து அரசாங்கம் விலக மாட்டாது. இப்போதும் 25000 மெட்ரிக் தொன் உரத்தை கொள்வனவு செய்வதற்கு டெண்டர் பத்திரம் கோரப்பட்டுள்ளது.

தனியார் துறையுடன் போட்டித் தன்மையுடன் செயற்பட்டு குறைந்த விலையில் உரத்தை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசாங்கத்தை அசௌகரியத்துக்குள்ளாகும் நோக்குடன் சில அதிகாரிகள் விவசாயிகளுக்கு வழங்கும் நிவாரணங்களை முறையாக பெற்றுக் கொடுப்பதில்லை அத்தகையோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

No comments:

Post a Comment