பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தவர் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவைச் சேர்ந்த 7 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி 10ஆம் திகதி நாரஹேன்பிட்டி பகுதியில் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினரால் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்திருந்தார்.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (சிஐடி) விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
ஹிக்கடுவை, தெல்வத்தையில் வசிக்கும் 41 வயதுடைய, நாரஹேன்பிட்டியிலுள்ள இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையில் உதவி முகாமையாளராக கடமையாற்றி வந்த ஒருவரே இவ்வாறு மரணமடைந்திருந்தார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பிரகாரம் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தின் உப பொலிஸ் பரிசோதகர் உட்பட 07 பொலிஸ் உத்தியோகத்தர்களை இன்று (09) குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சந்தேகநபர்கள் 7 பேரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை எதிர்வரும் ஜூன் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment