(நா.தனுஜா)
தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணுக்கு அமைய மதிப்பிடப்படும் நாடளாவிய ரீதியிலான பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதம் 33.6 சதவீதமாக பதிவாகியிருந்த நிலையில், அது கடந்த மே மாதத்தில் 22.1 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இப்பணவீக்க வீழ்ச்சிக்கு கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் மே மாதத்தில் உணவு மற்றும் உணவல்லாப் பொருட்களின் விலைகள், கட்டணங்களில் ஏற்பட்ட வீழ்ச்சியே பிரதான காரணமாக அமைந்துள்ளது.
இருப்பினும், கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு மே மாதம் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்புக்கு மேற்குறிப்பிட்ட பொருட்களின் விலைகள், கட்டணங்கள் உயர்வடைந்தமையே காரணமாகும்.
குறிப்பாக, மே மாத காலப்பகுதியில் புதிய மீன், மரக்கறி, சீனி, கோழி இறைச்சி, மைசூர் பருப்பு, உருளைக்கிழங்கு, இஞ்சி, வெள்ளைப்பூடு, பெரிய வெங்காயம், தேசிக்காய், கருவாடு போன்ற உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்த போதிலும், புதிய பழங்கள், பால்மா, அரிசி, தேங்காய், மிளகாய்த்தூள், தேங்காய் எண்ணெய், பாண், முட்டை, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், மஞ்சள்தூள், சிவப்பு வெங்காயம் ஆகிய உணவுப்பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைந்தன என்று தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேபோன்று தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் பிரகாரம், பொருளாதாரத்தில் தளம்பல் அடையும் விலைகளைக் கொண்ட உணவு, சக்திவலு மற்றும் போக்குவரத்து போன்றவை தவிர்ந்த ஏனையவற்றுக்கான மையப்பணவீக்கமானது கடந்த ஏப்ரல் மாதம் 31.8 சதவீதமாக பதிவாகியிருந்த நிலையில், அது மே மாதத்தில் 21.6 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
No comments:
Post a Comment