முச்சக்கர வண்டி சாரதியான சதாசிவம் குகானந்தன் என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ், முச்சக்கர வண்டி சாரதியொருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நேற்று (01) இத்தீர்ப்பையளித்தார்.
வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதிக்கே 10 வருடங்களின் பின்னர் இத்தண்டனை விதிக்கப்பட்டது.
வவுனியா, மருக்காரம்பளை பகுதியிலுள்ள முச்சக்கர வண்டி சாரதி ஒருவரின் வீட்டில் 2013.01.28 இல் புதுமனை புகுவிழா நடைபெற்றது. இந்நிகழ்வில் நடந்த இரவு விருந்துபசாரத்தில் கைகலப்பு ஏற்பட்ட பின்னர், மறுநாள் (29) ரயில் கடவையில் சடலமொன்று கிடந்துள்ளது.
இச்சடலம் பொலிஸாரின் உதவியுடன் மீட்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டபோது, முச்சக்கர வண்டியொன்றில் இரத்தக்கறை காணப்பட்டமை உறுதியானது.
இதனையடுத்து முதலாம் எதிரியான வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டு, இரண்டாம் சந்தேக நபரான மற்றுமொரு முச்சக்கர வண்டி சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் தடுப்புக் காவலிலிருந்து இவ்விருவரும் விடுவிக்கப்பட்டனர்.
எனினும், கடந்த 2018 இல், இக்கொலைச் சம்பவம் தொடர்பில் முதலாம் மற்றும் இரண்டாம் எதிரிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் வவுனியா மேலம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில், முதலாம் எதிரிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு, இரண்டாம் எதிரியான சந்தேக நபர் விடுதலையளிக்கப்பட்டார்.
வவுனியா விசேட நிருபர்
No comments:
Post a Comment