எரிபொருள் விலைகள் குறையும், மின் கட்டணத்தில் சலுகை - மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு - News View

About Us

About Us

Breaking

Saturday, May 6, 2023

எரிபொருள் விலைகள் குறையும், மின் கட்டணத்தில் சலுகை - மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு

(எம்.மனோசித்ரா)

சீன, அவுஸ்திரேலிய மற்றும் அமெரிக்க எரிபொருள் விநியோக நிறுவனங்கள் அவற்றின் செயற்பாடுகளை ஒரு மாதத்துக்குள் ஆரம்பிக்கவுள்ளன. அதன் பின்னர் எரிபொருள் விலைகள் மேலும் குறைவடைவதோடு, விரைவில் மின் கட்டணத்தில் சலுகைகளும் மக்களுக்கும் வழங்கப்படும் என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்கவுள்ள விநியோக்கத்தர்களுக்கு கிடைக்கப் பெறவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள் உள்ளிட்ட தரப்பினருடன் வியாழக்கிழமை (04) கொழும்பு மன்றக் கல்லூரியில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த ஆகியோர் மேற்குறிப்பிட் விடயங்களைத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாட்டில் நிறுவப்படவுள்ள 450 எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் தலா 150 என மூன்றாகப் பிரிக்கப்பட்டு புதிய வெளிநாட்டு எரிபொருள் விநியோக்கத்தர்களுக்கு வழங்கப்படும். ஒரு மாதத்திற்குள் புதிய விநியோகத்தர்கள் இலங்கையில் அவர்களின் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளனர்.

அதற்கமைய புதிய விநியோகத்தர்களுக்கான சந்தைப்படுத்தல் பிரதிநிதிகளை ஒதுக்குவது, பயன்படுத்தப்படவுள்ள இயந்திரங்களை வகைப்படுத்துவது, புதிய உடன்படிக்கைகள், விலை சூத்திரம், புதிய விநியோகத்தர்களுக்கான நன்மைகள், சந்தைப்படுத்தல் பிரதிநிதிகளுக்கு கிடைக்கும் வருமானம், அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் விதிமுறைகள் தொடர்பாக இந்த சந்திப்பின்போது ஆராயப்பட்டது.

இதேவேளை இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினருடனும் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில் எரிபொருள் விலை சூத்திரம், புதிய எரிபொருள் நிலையங்களை நிறுவுதல், எரிபொருள் விநியோகம், எண்ணெய் தாங்கி களஞ்சியசாலை வசதிகளை விரிவாக்கம் செய்தல் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட வலு சக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, 'எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழங்குவதற்காக மூன்று நிறுவனங்களுடன் உடன்படிக்கைகள் கைசாத்திடப்பட்டுள்ளன. அதில் இரண்டு நிறுவனங்கள் இதுவரை விருப்பம் தெரிவித்துள்ளன. விருப்பம் தெரிவித்துள்ள நிறுவனங்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழங்குவது தொடர்பிலேயே கலந்துரையாடப்பட்டது.

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எரிபொருள் விநியோகத்துக்கான வாய்ப்புக்கள் வழங்கப்படுவதால் போட்டித்தன்மை அதிகரிக்கும். எனவே எரிபொருட்களின் விலைகள் மேலும் குறைவடையும். அத்தோடு தட்டுப்பாடின்றி எரிபொருளை விநியோகிப்பதற்கான வாய்ப்புக்களும் உருவாகும்.

கியூ.ஆர். குறியீட்டு முறைமையை நீக்குவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. போதியளவு எரிபொருள் களஞ்சியப்படுத்தப்பட்டதன் பின்னர் அது குறித்த தீர்மானம் எடுக்கப்படும். மின் கட்டணம் தொடர்பிலும் நிச்சயம் விரைவில் சலுகைகள் வழங்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment