(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
புள்ளிவிபரங்களின் பிரகாரம் தனி நபர் ஒருவரின் வருமானம் 13772 ரூபாவுக்கு குறைவாக இருந்தால் அது வறுமை நிலையாகும். அதன் பிரகாரம் தோட்டப்புறங்களின் வறுமை நிலையானது, சுமார் 56 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. அந்த வகையில் அரசாங்கத்தின் நிவாரணங்கள் வழங்கும் திட்டத்தில் தோட்டங்களில் இருக்கும் குடும்பங்களில் 50 சதவீத்துக்கு அதிகமானவர்கள் இதற்கு உள்வாங்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 2022 டிசம்பர் மாத புள்ளிவிபரங்களுக்கு அமைய தனி நபர் ஒருவரின் வறுமை நிலையானது 13 ஆயிரத்தி 772 ரூபாவாக இருக்கிறது. 13 ஆயிரத்தி 772 ரூபாவுக்கு குறைவாக பெறுகின்றபோது அது வறுமை நிலையை காட்டுகிறது.
அந்த வகையில், நாட்டில் இருக்கிற நகர, கிராம தோட்டப்புறங்கள் என பார்க்கும்போது தோட்டப்புறங்களின் வறுமை நிலையானது, சுமார் 56 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.
அந்த வகையில் நிவாரணங்கள் வழங்கும் திட்டத்தில் தோட்டங்களில் இருக்கும் குடும்பங்களில் 50 சதவீத்துக்கு அதிகமானவர்கள் இதற்கு உள்வாங்கப்பட வேண்டும்.
ஒரு தனிநபருக்குரிய வறுமைக்குரிய வருமானம் 13772 ரூபாவாக இருக்கும்போது 4 பேர் கொண்ட குடும்பமாக இருந்தால் 55 ஆயிரத்தி 88 ரூபா அவர்களின் குறைந்தபட்ச வருமானமாக இருக்க வேண்டும்.
3 பேர் கொண்ட குடும்பமாக இருந்தால் அவர்களின் வருமானம் 41 ஆயிரத்தி 316 ரூபாவாக இருக்க வேண்டும். ஆனால் தோட்டப்புறங்களில் இருப்பவர்களின் வருமானம் இதனைவிட மிக குறைவாகவே இருந்து வருகிறது.
அதேபோன்று தோட்டங்களில் ஒரு லயத்தில் பல குடுப்பங்கள் இருந்து வரும் சூழலே காணப்படுகின்றது. ஆனால் அரசாங்கத்தின் நிவாரண திட்டத்தின்போது ஒரு லயத்தில் ஒரு குடும்பமாகவே கணக்கிட்டு, அவர்களை உள்வாங்கும் நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனால் அரசாங்கம் இந்த வேலைத்திட்டத்துக்கு எந்த நியதியின் அடிப்படையில் வறுமையில் உள்ளவர்கள் உள்வாங்கப்படுகிறார்கள்? அந்த நியதிகள் என்ன என்பதை பகிரங்கப்படுத்தி வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊழியர் சேமலாம் மற்றும் நம்பிக்கை நிதியத்தை செலுத்த தவறிய தொழிலதிபர்களுககு எதிராக 15 ஆயிரம் வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. இதில் அரச நிறுவனங்களும் உள்ளடங்குகின்றன.
குறிப்பாக ஜே.ஈ.டி.பி நிறுவனம், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை, எஸ்.எல்.எஸ்.பி.சி நிறுவனம் போன்ற அரச நிறுவனங்களுக்கு எதிராகவும் ஈ,பி,எப். ஈடிஎப். நிலுவை தொடர்பான வழக்குகளும் பேசப்பட்டு வருகின்றன.
அத்துடன் மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை காணிகளை விற்பனை செய்யும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கண்டி பிரதேசத்தில் மக்கள் இதற்கு எதிராக போராட்டங்களை மேற்கொண்டு வருகிறதையும் கண்டுகொள்ளாமல் இந்த பணியை மேற்கொண்டு வருகிறது என்றார்.
No comments:
Post a Comment