காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை துரத்தும் கர்மவினை : ஒரு வருடத்தினுள் தொடர்ச்சியாக பலர் பலி என்கிறார் ரோஹித - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 9, 2023

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை துரத்தும் கர்மவினை : ஒரு வருடத்தினுள் தொடர்ச்சியாக பலர் பலி என்கிறார் ரோஹித

காலி முகத்திடலில் போராட்டம் நடத்தியவர்கள் மற்றும் தொடர்புபட்டிருந்தவர்களை கர்மவினை துரத்திக் கொண்டிருப்பதாகவும், இதனால் போராட்டக்காரர்களில் பலர் தொடர்ச்சியாக மரணித்து வருவதாகவும் முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதேவேளை, களுத்துறையில் சில நாட்களுக்கு முன்னர் 16 வயது சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், காலி முகத்திடல் போராட்டத்தின் பிரதான செயற்பாட்டாளர்களில் ஒருவராக செயல்பட்டவர் என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஏற்றுமதி அபிவிருத்தி சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், காலி முகத்திடல் போராட்டத்தில் பல்வேறுபட்ட நபர்கள் செயற்பட்டனர். அங்கு கூடாரங்களை அமைத்து அவற்றுக்கு பல பெயரிட்டு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். எனினும், அவர்கள் எமது எதிரியாக இருந்தாலும் கூட அவர்களுக்கு எந்த பாதிப்பு நடந்தாலும் அது தொடர்பாக மகிழ்ச்சியடையக் கூடாது. நமது பௌத்த நாட்டில் இயற்கையாக சில சம்பவங்கள் நடப்பதை அவதானிக்க முடிகிறது.

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் பந்தங்கள் ஏந்தி மந்திரம் ஓதி செயற்பட்ட பூசாரி, மின்னல் தாக்குதலுக்குள்ளாகி இறந்துள்ளார். அதேபோன்று அங்கிருந்த நூலகத்திற்கு பொறுப்பாக இருந்தவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

வெசாக்கின் போது கறுப்பு நிறத்தில் வெசாக் கூடு செய்தவர், இப்போது பைத்தியக்கார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த போராட்டத்தில் முக்கியமான ஒருவர் தெஹிவளை பகுதியில் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். இன்னுமொருவர் நீரில் மூழ்கி இறந்துள்ளார்.

அதேவேளை மகிந்த ராஜபக்‌ஷவுக்கு மரண போஸ்டர் அச்சிட்டவர், லங்கா வைத்தியசாலையில் மரணித்துள்ளார். இதுதான் கர்ம வினையால் கிடைப்பவை.

அதேவேளை, ஜனாதிபதியின் கொடியை திருடிச் சென்ற தொழிற்சங்க பிரதானி ஆட்டோ விபத்தில் தமது கால் ஒன்றை இழந்துள்ளார்.

அத்துகோரள எம்.பியின் கொலையுடன் தொடர்புடைய ஒருவர் சிறையில் உயிரிழந்துள்ளார். இவை இந்த ஒரு வருடத்திற்குள் நடந்தவை. கர்ம வினையின் பலன்களை இப்போது காணக்கூடியதாக உள்ளது.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

No comments:

Post a Comment