நீதிமன்றம் தொடர்பான நம்பிக்கை இல்லாமல்போனால் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாது : விஜேதாச ராஜபக்ஷ் - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 16, 2023

நீதிமன்றம் தொடர்பான நம்பிக்கை இல்லாமல்போனால் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாது : விஜேதாச ராஜபக்ஷ்

(எம்.ஆர்.எம்.வசீம்)

நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரன்ஜன் ராமநாயக்க ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடுத்தவர்கள், அவர்களின் செய்தியை அறிக்கையிட்ட ஊடகவியலாளர்களுக்கு எதிராக தொடுத்திருந்தால், அவர்களும் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கு ஆளாகி இருந்திருக்கலாம். அத்துடன் நீதிமன்றம் தொடர்பான நம்பிக்கை இல்லாமல்போனால் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாது. அதனால் நீதிமன்ற சுயாதீனத் தன்மையை பாதுகாப்பது அனைவரதும் பொறுப்பாகும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குற்றங்கள் தொடர்பில் அறிக்கையடுவது சம்பந்தமாக ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் செயலமர்வு திங்கட்கிழமை (15) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்தேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் தலைமை உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டின் அடிப்படை இருப்புக்கு நிறைவேற்றுத்துறை, பாராளுமன்றம் மற்றும் நீதிமன்றம் ஆகிய அடிப்படை மூன்று தூண்கள் தேவைப்படுகின்றன. ஆனால் இன்று அந்த அடிப்படை மூன்று தூண்கள் நான்காக மாறியுள்ளது.

சுதந்திர ஊடகம் 4 ஆவது தூணாக இணைந்திருக்கிறது. ஊடகங்கள் ஊடாக கேட்கும் பார்க்கும் விடயங்களின் பிரகாரம் தீர்மானங்கள் எடுப்பதற்கு மக்கள் இன்று மாறியுள்ளனர். அதனால் ஊடகவியலாளர்கள் அறிக்கையிடும்போது சுயாதீனமாக சரியான விடயங்களை அறிக்கையிட வேண்டும்.

எமது கலாசார அடையாளங்கள் பல்வேறுபடலாம். நாங்கள் பல்வகைமையில் ஒன்றிணைய வேண்டும். ஜனநாயக சமூகத்தில் அனைத்து பிரஜைகளுக்கும் கடமை மற்றும் உரிமைகள் இருக்கின்றன. நாங்கள் அதனை புரிந்து செயற்பட வேண்டும்.

ஊடகத் துறையை உறுதிமிக்கதாக மேற்கொள்ளல் நீதியை நிலைநாட்டுவதில் செயற்திறமையான முறையொன்றை ஸ்பாபிப்பது ஜனநாயக நாட்டுக்கு தேவையான விடயமாகும்.

நீதிமன்றம் தொடர்பான நம்பிக்கை உறுதிப்படுத்தப்படுவது மிகவும் தேவையான விடயம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

நீதிமன்றம் தொடர்பான நம்பிக்கை இல்லாமல்போனால் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாது. அதனால் நீதிமன்ற சுயாதீனத் தன்மையை பாதுகாப்பது அனைவரதும் பொறுப்பாக இருக்கிறது.

ஜனநாயகத்தின் இருப்புக்கு மக்களுக்கு தகவல் வழங்குவது ஊடகங்களாகும். அதனால் மக்களுக்கு சரியான தகவல்களை வழங்க வேண்டும். ஊடகங்கள் செயற்படுகின்ற முறைக்கு அமைய மக்கள் பிழையான தீர்மானங்களை மேற்கொள்ள முடியும்.

மேலும் நீதிமன்ற செய்தியொன்றை அறிக்கையிடும்போது, மக்களுக்கு சரியான செய்தியை அறிக்கையிடுவது முக்கியமாகும். நீங்கள் அறிக்கையிட்ட செய்தி வழக்கொன்றின் தீர்ப்புக்கு தாக்கத்தை ஏற்படுத்தினால், நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்கு ஆளாகவேண்டி ஏற்படலாம்.

நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரன்ஜன் ராமநாயக்க ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடுத்தவர்கள், அவர்களின் செய்தியை அறிக்கையிட்ட ஊடகவியலாளர்களுக்கு எதிராக தொடுத்திருந்தால், அவர்களும் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கு ஆளாகி இருந்திருக்கலாம். அதனால் ஊடகவியலாளர்களாக செயற்படுபவர்கள் முதலாவதாக தங்களின் பாதுகாப்பு தொடர்பில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அத்துடன் சட்டம் என்பது நாளாந்தம் புதுப்பிக்கப்படும் விடயமாகும். அதனாலே கடந்த சில மாதங்களுக்குள் நாங்கள் புதிய 35 சட்டங்களை புதுப்பிக்க நடவடிக்கை எடுத்தாேம் என்றார்.

No comments:

Post a Comment