சகல கட்சிகளுடனும் கலந்துரையாடத் தீர்மானம் - விஜயதாச ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Monday, May 1, 2023

சகல கட்சிகளுடனும் கலந்துரையாடத் தீர்மானம் - விஜயதாச ராஜபக்ஷ

(எம்.மனோசித்ரா)

உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளுடனும் கலந்துரையாடத் தீர்மானித்துள்ளதாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

கடந்த வாரம் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. எவ்வாறிருப்பினும் அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் நடவடிக்கையை பிற்போடுவதாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ சபையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது குறித்த அடுத்த நடவடிக்கை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், எதிர்வரும் 9ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ளது. இதன்போது புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளுக்கும் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். எனவே எமது தெளிவுபடுத்தல்களின் பின்னர் எந்தவொரு கட்சியும் தத்தமது நிலைப்பாடுகளையும், திருத்தங்களையும் முன்வைக்க முடியும்.

அரசியல் கட்சிகள் மாத்திரமின்றி எந்தவொரு தரப்பினருடனும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு நாம் தயாராகவே உள்ளோம். இது குறித்த நிலைப்பாடுகள் மற்றும் திருத்தங்கள் ஏற்கனவே கோரப்பட்டுள்ளன. எனினும் இதுவரையிலும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான சமூக நீதிக்கான தேசிய இயக்கம் மாத்திரமே அதன் நிலைப்பாடுகளை சமர்ப்பித்துள்ளது.

இவ்வாறு எந்தவொரு தரப்பினராலும் முன்வைக்கப்படும் முன்மொழிவுகள் தொடர்பில் மதிப்பாய்வு செய்வதற்கும், கலந்துரையாடுவதற்கும் நாம் தயாராகவுள்ளோம். எனவே அடுத்த வாரத்திலாவது அரசியல் கட்சிகள் உள்ளிட்ட தரப்பினரால் திருத்தங்கள் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment