(நா.தனுஜா)
ஓமானிலுள்ள இலங்கைத் தூதரகம் முன்பாக சுமார் இரு வார காலமாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இலங்கைப் பணிப் பெண்கள் உள்ளிட்ட 72 பேர் அந்நாட்டுப் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டிருக்கும் நிலையில், விசாரணைகளின் பின்னர் அவர்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஓமானில் பணி புரியும் இலங்கைப் பெண்கள், தாம் மீண்டும் நாடு திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி கடந்த 8 ஆம் திகதி முதல் சுமார் இரு வார காலமாக ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த 8 ஆம் திகதி சுமார் 10 பேரால் ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டத்தில் 9 ஆம் திகதி மேலும் 10 பேரும், 14 ஆம் திகதி மேலும் 5 பேரும் இணைந்து கொண்டனர்.
இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களில் பலர், தாம் பணி புரியும் வீட்டு உரிமையாளர்களால் துன்புறுத்தப்படுவதாகவும் சிலர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டதுடன் தம்மை மீண்டும் நாட்டுக்கு அழைத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.
ஓமானில் பணி புரியும் பெண்களில் பலர் இலங்கையிலுள்ள பதிவு செய்யப்படாத முகவர்களினால் ஏமாற்றி அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் அங்கு சென்றதன் பின்னர் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாகவும் சுட்டிக்காட்டிய பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பின் தலைவி ஷ்ரீன் ஸரூர், இது குறித்து தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் பேசிய போதிலும் சாதகமான பதில் எதுவும் கிட்டவில்லை என்று கவலை வெளியிட்டார்.
மேலும் இவ்வாறு வேலை வாய்ப்புக்காக ஓமானுக்குச் சென்ற பெண்களில் பலர் இலங்கையில் நுண்கடன் பெற்று அதனை மீளச் செலுத்த முடியாமல் பாதிக்கப்பட்டவர்கள் என்றும், கடந்த ஆண்டு தீவிரமடைந்த பொருளாதார நெருக்கடியினால் வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் என்றும் தெரிவித்த ஷ்ரீன் ஸரூர், அவர்கள் நாட்டுக்குப் பெருமளவான அந்நியச் செலாவணி வருமானத்தை ஈட்டித்தருகின்ற போதிலும் அவர்களது நலனில் அரசாங்கம் அக்கறை செலுத்தாமல் இருப்பது கவலையளிப்பதாகக் குறிப்பிட்டார்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண்களின் நிலை குறித்து ஓமானுக்கான இலங்கைத் தூதுவர் ஸபருல்லா கானிடம் வினவியபோது, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சுமார் 25 பேர் உள்ளடங்கலாக பாதுகாப்பான தங்குமிடத்தில் இருந்த சுமார் 50 க்கும் மேற்பட்டோர் ஓமானின் தொழில் திணைக்கள அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமைவாக அந்நாட்டுப் பொலிஸாரால் கடந்த செவ்வாய்க்கிழமை அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாகத் தெரிவித்த அவர், விசாரணைகளின் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டு நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று கூறினார்.
இலங்கை போன்ற நாடுகளிலிருந்து வருகை தரும் பணிப் பெண்களை வேலைக்கு அமர்த்துவதற்காக ஓமானிலுள்ள வீட்டு உரிமையாளர்கள் 16 - 17 இலட்சம் ரூபாவை வேலை வாய்ப்பு முகவர்களுக்குச் செலுத்துவதாகவும், அதன்படி குறித்த பணிப் பெண்கள் 2 வருடங்கள் வரை பணி புரிய வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும், அப்பணிப் பெண்களுக்குரிய வீசாவை வீட்டு உரிமையாளர்களே தயார் செய்வதாகவும் சுட்டிக்காட்டிய தூதுவர் ஸபருல்லா கான், எனவே அவர்கள் குறுகிய காலத்தில் நாடு திரும்ப வேண்டுமெனில் அதற்குக் குறித்த வீட்டு உரிமையாளர்களின் அனுமதி அவசியம் என்றும் இல்லாவிடின் அதற்குரிய நட்டஈட்டை செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இவ்வாறானதொரு பின்னணியில் இதுபற்றி விளக்கமளித்த வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளர் செனரத் யாப்பா, ஓமான் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட சுமார் 72 இலங்கையர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் அந்நாட்டுப் பொலிஸாரே அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்றும், இவ்விடயம் தொடர்பில் இதுவரையில் தமக்கு எவ்வித தகவல்களும் கிட்டவில்லை என்றும் தெரிவித்தார்.
இருப்பினும் இவ்விடயத்தில் அங்குள்ள இலங்கையர்களுக்கு உடனடிக் கடவுச்சீட்டு போன்ற தேவைகள் காணப்படின், அதனைப் பூர்த்தி செய்வதற்குத் தாம் தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.
ஓமானில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள இலங்கைப் பெண்கள் துன்புறுத்தல்களுக்கும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருக்கும் நிலையில், இவ்விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்குமாறுகோரி ஏற்கனவே கடந்த பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர்களான டொமொயா ஒபொகாட்டா மற்றும் சியோபென் முலேலி ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்குக் கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment