ஏரி ஒன்றில் மூழ்கி மரணித்ததாக கருதப்பட்ட வயோதிபப் பெண் ஒருவர் பல மணித்தியாலங்களின் பின் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குருணாகல், கட்டுபொத்த, பொல்பிட்டிய பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று (20) இரவு 79 வயதுடைய 2 பிள்ளைகளின் தாயான குறித்த பெண் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் காணாமல் போனதையறிந்த அவரது உறவினர்கள் பிரதேசவாசிகளின் உதவியுடன் அப்பகுதியில் தேடியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த ஏரிக்கு அருகே அவரது ஊன்றுகோல் மற்றும் செருப்பு ஆகியன காணப்பட்ட நிலையில், குறித்த ஏரியின் ஒரு சதுப்பு நிலப்பகுதியில் குறித்த பெண் கிடப்பதை அவரது மருமகன் கண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து குறித்த பெண் பேச்சுமூச்சின்றி இருப்பதை கண்ட அவர், முழ்கி இறந்துவிட்டதாக கருதி, பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளையும் செய்ததோடு, சடலத்தை ஏரியில் இருந்து மீட்பதற்காக மரண விசாரணை அதிகாரி வரும் வரை காத்திருந்தனர்.
இந்நிலையில், சம்பவத்தை அறிந்த பிரதேசவாசிகள் அப்பகுதியை சூழ்ந்திருந்த நிலையில், குறித்த பெண் இருந்த இடத்தில் அசைவொன்று ஏற்படுவதை அவதானித்துள்ளனர்.
அப்பகுதியில் முதலை போன்ற உயிராபத்துக்கள் இருப்பதால் எவரும் அப்பகுதிக்கு செல்ல முன்வராத நிலையில் நிமேஷ் சந்தருவன் எனும் இளைஞர் ஒருவர் குறித்த இடத்திற்கு தன்னார்வமாக சென்றுள்ளார். இதன்போது, குறித்த பெண் அந்த இளைஞனுடன் உரையாட முற்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஏனையோரின் உதவியுடன் அவர் ஏரியிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டு கட்டுபொத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணுக்கு தற்போது எவ்வித உயிராபத்தும் இல்லையென வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பெண் எவ்வாறு அங்கு சென்றார், எவ்வாறு இந்நிகழ்வுகள் இடம்பெற்றன என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment