ஒளிபரப்பு அதிகார சபை சட்டம் ஊடாக ஊடகங்களை கட்டுப்படுத்த முடியாது : வெளிநாடுகளிலிருந்து பணம் கிடைப்பதாக தகவல் என்கிறார் நீதி அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 31, 2023

ஒளிபரப்பு அதிகார சபை சட்டம் ஊடாக ஊடகங்களை கட்டுப்படுத்த முடியாது : வெளிநாடுகளிலிருந்து பணம் கிடைப்பதாக தகவல் என்கிறார் நீதி அமைச்சர்

(எம்.ஆர்.எம்.வசீம்)

ஒளிபரப்பு அதிகார சபை சட்டம் கொண்டுவருவதன் மூலம் ஊடகங்களையோ சமூக ஊடகங்களையோ அதன் மூலம் கட்டுப்படுத்த முடியாது. மாறாக ஊடகங்கள் மேற்கொண்டு செல்லும் நடவடிக்கையை மேலும் சிறப்பாக கொண்டுசெல்வதற்கு உதவும் வகையிலேயே இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டிருக்கிறது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

அரசாங்கம் கொண்டுவர இருக்கும் ஒளிபரப்பு அதிகார சபை சட்டம் ஊடகங்களை அடக்குவதற்கான நடவடிக்கை என தெரிவிக்கப்படும் கருத்து தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஊடகங்களை அடக்குவதற்கு அரசாங்கத்திற்கு எந்த தேவையும் இல்லை. அவ்வாறான எண்ணமும் இல்லை. என்றாலும் தற்போது தயாரிக்கப்பட்டு வரும் ஒளிபரப்பு அதிகார சபை சட்டமூலம் தொடர்பில் சரியான தெளிவில்லாமலே சிலர் இவ்வாறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன் ஒளிபரப்பு அதிகார சபை சட்டம் கொண்டுவருவதன் மூலம் ஊடகங்களையோ சமூக ஊடகங்களையோ அதன் மூலம் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அரசாங்கம் தயாரித்து வரும் ஒளிபரப்பு அதிகார சபை சட்டமூலம், ஊடகங்கள் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை மேலும் சிறப்பாக முன்னெடுத்துச் செல்வதற்கான உதவியாக அமையும் வகையிலே தயாரிக்கப்பட்டிருக்கிறது.

அதேநேரம் ஒளிபரப்பு அதிகார சபை சட்டமூலம் தொடர்பாக அனைத்து ஊடகங்களுடன் எதிர்வரும் காலங்களில் கலந்துரையாடுவோம்.

மேலும் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை இல்லாமல் செய்பவர்களுக்கு சில பிரதான ஊடகங்கள் அவர்களுக்கு பிரபல்லியம் பெற்றுக் கொடுக்கின்றன. அதனால் இன மத நல்லிணக்கத்தை இல்லாமல் செய்வதற்கு சமூக ஊடகங்களில் பிரபல்லியமாக இருப்பவர்களுக்கு உதவி செய்ய வேண்டாம்.

ஏனெனில் இவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து உதவிகள் கிடைத்து வருவதாக எமக்கு தகவல் கிடைத்திருக்கிறது. எமது நாட்டில் சில பெளத்த தேரர்களுக்கும் இவ்வாறு பணம் வருவதாக வெளிப்பட்டிருக்கிறது.

நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிக்கும்போது, மீண்டும் அழிப்பதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். அதேபோன்று தற்போது சிலர் பெளத்த மதத்தையும் தேரர்களையும் அகெளரவப்படுத்தி அழித்துவிட முயற்சிக்கி்ன்றனர்.

வெறுப்பூட்டும் பேச்சுக்கள் இலத்திரனியல் ஊடகம், அச்சு ஊடகம், டிக்டொக், முகப்புத்தகம் என எந்த ஊடகங்களில் பிரசுரித்தாலும் குற்றமாகும். என்றாலும் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த அரசாங்கத்துக்கு முடியாது.

சமூக ஊடகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் வேறுப்பூட்டும் பேச்சுக்கள் தொடர்பில் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். ஆனால் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த எமக்கு சட்டம் அமைக்க முடியாது என்றார்.

No comments:

Post a Comment