கிழக்கு மாகாண காணிப் பிரச்சினைகளுக்கு விரைவில் முழுமையான தீர்வு வழங்கப்படும் - அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Friday, May 26, 2023

கிழக்கு மாகாண காணிப் பிரச்சினைகளுக்கு விரைவில் முழுமையான தீர்வு வழங்கப்படும் - அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ

(எம்.மனோசித்ரா)

கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தின் பின்னர் இன்னமும் தீர்க்கப்படாமலுள்ள பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய சட்டத்திருத்தங்கள் ஊடாக கிழக்கு மாகாணத்தில் காணிப் பிரச்சினைக்கு விரைவில் முழுமையான தீர்வு வழங்கப்படும் என நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண செயலாளர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, யுத்தம் நிறைவடைந்து 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், பல்வேறு பிரச்சினைகள் இன்றும் தீர்க்கப்படாமலுள்ளன. எனினும் நல்லாட்சி அரசாங்கத்தில் காணாமல் போனோர் அலுவலகம், நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் இழப்பீட்டு அலுவலகம் என்பன அமைக்கப்பட்டன.

யுத்தம் காரணமாக இந்தியா போன்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வாழ வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது. இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு காணி உரிமம் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டது.

இதற்காக காணி மத்தியஸ்த சபைகள் அமைக்கப்பட்டு காணி பிரச்சினைகளை இலகுவாகத் தீர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. யுத்தத்தால் காணிகளை இழந்தவர்களுக்காக நாட்டின் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சட்டங்களில் கூட மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.

நாட்டில் முன்னர் காணப்பட்ட சட்ட ஏற்பாடுகளுக்கமைய நபரொருவர் பிரிதொருவரின் காணியை பலவந்தமாகவேனும் 10 ஆண்டுகளுக்கு தன்வசம் வைத்திருப்பாராயின், அந்தக் காணி அவருக்கு சொந்தமானதாகும். இவ்வாறான சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து மீள வருகை தந்தவர்களிடம் தாம் இலங்கை பிரஜைகள் என்று நிரூபிப்பதற்கான எந்தவொரு ஆவணமும் காணப்படவில்லை. வடக்கில் இவ்வாறான 12000 பேர் இணங்காணப்பட்டனர். இவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட விசேட நடமாடும் வேலைத்திட்டத்தின் ஊடாக 90 சதவீதமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதேபோன்று கிழக்கிலுள்ள பிரச்சினைகளும் விரைவில் தீர்க்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment