(எம்.மனோசித்ரா)
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவத்திலேயே அடுத்து ஆட்சியமைக்கப்படும். எவரது தயவும் இன்றி எம்மால் ஆட்சியமைக்க முடியும். மாறாக ஆட்சியமைப்பதற்கு எவருக்கேனும் எமது தயவு வேண்டுமானால் அவர்கள் எம்முடன் இணையலாம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஆசிய நாடுகளைப் பின்பற்றி, ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்புக்களைப் பெற்று முன்னேறும் வழி குறித்து சிந்திக்க வேண்டும். நாட்டை பிளவுபடுத்தாத, இறையான்மைக்குள் தலையிடாத சர்வதேச ஒத்துழைப்புக்கள் நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாதவையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கண்டியில் திங்கட்கிழமை (01) இடம்பெற்ற சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், அடுத்து ஆட்சியமைப்பதற்கான பல்வேறு கொள்கைகள் எம்மால் தயாரிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் அடுத்து ஆட்சியமைப்பது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாகவே இருக்கும். அவ்வாறில்லை எனில் எமது ஆதரவின்றி எந்தவொரு தலைவராலும் ஆட்சியமைக்க முடியாது.
அனைத்து இன மக்கள் மத்தியிலும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டும். ஒற்றுமையின் ஊடாகவே இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக்க முடியும். மாறாக இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்துவது முட்டாள்த்தனமான செயற்பாடாகும்.
இந்தியா, ஜப்பான், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளைப் பின்பற்றி நாமும் முன்னோக்கிச் செல்ல வேண்டும். இதற்கு ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். நாட்டை பிளவுபடுத்தாத, இறையான்மையில் தலையிடாத சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு எமக்கு மிக அவசியமாகும்.
நாட்டில் நீதியையும் அமைதியையும் நிலைநாட்டும் அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும். எனவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியால் மாத்திரமே நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியும்.
இனியொருபோதும் சுதந்திர கட்சி அதன் தனித்துவத்தன்மையை விட்டுக் கொடுத்து, எந்தவொரு கட்சியின் பின்னாலும் செல்லாது.
கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் நாம் தவறிழைத்து விட்டோம். எவ்வாறிருப்பினும் தெய்வாதீனமாக இம்முறை தேர்தல் காலம் தாழ்த்தப்பட்டுள்ளமையால் நாம் தப்பித்துக் கொண்டோம்.
எனவே எவரது தயவும் இன்றி எம்மால் ஆட்சியமைக்க முடியும். எவருக்கேனும் எமது தயவு வேண்டுமானால் அவர்கள் எம்முடன் இணையலாம் என்றார்.
No comments:
Post a Comment