(இராஜதுரை ஹஷான்)
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை (09) நள்ளிரவு முதல் ஒரு நாள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ள்ளனர்.
இந்த பணிபுறக்கணிப்பு போராட்டத்தினால் பயணிகள் புகையிரத சேவைக்கு பாதிப்பு ஏற்படாது என புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம்
நிதி ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சந்திரசேன பண்டார என்பவரை புகையிரத திணைக்களத்தின் வணிக பிரதி முகாமையாளராக நியமிக்க வேண்டாம் என புகையிரத திணைக்களத்திடமும்,போக்குவரத்து அமைச்சிடமும் பலமுறை வலியுறுத்தினோம்.
இந்த நியமனத்தை வழங்கினால் உடன் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்பதை முன்கூட்டியே உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தினோம். ஆனால் அதனை கவனத்திற் கொள்ளாமல் நேற்று இவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 24 மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளோம்.
பயணச்சீட்டு விநியோகம், புகையிரத சேவை ஒழுங்குப்படுத்தல் உள்ளிட்ட சேவைகளில் ஈடுபடமாட்டோம். 24 மணி நேரத்துக்குள் ஒரு தீர்வினை வழங்காவிடின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் கவனம் செலுத்துவோம் என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.
புகையிரத திணைக்களம்
தனிப்பட்ட காரணிகளை முன்னிலைப்படுத்தியே புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளார்கள்.
24 மணி நேர பணிபுறக்கணிப்பில் ஈடுபடப் போகும் தீர்மானத்தை இன்று மாலை தான் எமக்கு கடிதம் ஊடாக அறிவித்தார்கள். எவ்வித பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. ஆகவே இவர்களின் போராட்டத்தினால் பயணிகள் புகையிரத சேவைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment