களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட, காலி வீதியிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு பின்னால் புகையிரத பாதைக்கு அருகில் நிர்வாணமான நிலையில் மாணவி ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (06) மாலை களுத்துறை தெற்கு பொலிஸாருக்கு வந்த தொலைபேசி அழைப்பின் பிரகாரம் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் களுத்துறை நாகொட பகுதியைச் சேர்ந்த 16 வயதுடையவர் என அவரது பெற்றோரால் அடையாளம் அடையளாம் காணப்பட்டுள்ளார்.
மரணமடைந்தவர் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்களுடன் நேற்று (06) மாலை 6.30 மணியளவில் குறித்த ஹோட்டலுக்கு வந்ததாகவும், அவர்கள் ஹோட்டலில் இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்ததாகவும், இரவு 7.30 மணியளவில் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் ஹோட்டலை விட்டு வெளியேறியதாகவும் அதன் பின் குறித்த மாணவியுடன் இருந்த நபர் வெளியேறியதாக விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
அதன் பின்னர், ஹோட்டலுக்குப் பின்புறமாக உள்ள புகையிரத தண்டவாளத்தின் அருகே குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறை தெற்கு பொலிஸாரும், களுத்துறை குற்றத் தடுப்பு நிலைய அதிகாரிகளும் சம்பவ இடத்தை விசாரணை செய்து நீதவான் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்காக களுத்துறை நாகொட வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
உயிரிழந்தவர் சிறுமி என்பதால், தவறான தகவல்களைச் சமர்ப்பித்து விடுதியில் இருந்து அறையைப் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் குறித்த ஹோட்டலுக்கு வந்த மற்றைய இளைஞனும் யுவதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த 16 வயது சிறுமியுடன் இருந்ததாக கூறப்படும் நபரை கைது செய்ய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறித்த ஹோட்டலுக்கு பாணந்துறை பிரதேசத்தில் உள்ள முகவரியை வழங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த யுவதி நேற்று (06) களுத்துறை நகரில் வெசாக் பார்வையிடுவதற்காக வீட்டை விட்டு வெளியே வந்துள்ள நிலையில், நட்பின் காரணமாக இந்த இளம் ஜோடி இந்த ஹோட்டலுக்கு வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மாலை 6.30 மணியளவில் ஹோட்டலுக்கு வந்த இவர்கள் மது மற்றும் உணவுகளை எடுத்து வந்ததாகவும், மது மற்றும் உணவு பாட்டில் முழுமையாக உட்கொள்ளப்படவில்லை என்றும் விசாரணையை மேற்கொண்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த ஹோட்டலுக்கு வந்த நான்கு பேரில் மூன்று பேர் மட்டும் இரவு 7.30 மணியளவில் வெளியே சென்றுள்ளனர்.
உயிரிழந்த சிறுமி அணிந்திருந்த அறையில் கழற்றப்பட்டிருந்த ஆடைகளை பொலிஸார் மீட்டுள்ளனர். இறந்த சிறுமியின் உடலில் வெளிப்புற கீறல்கள் மற்றும் காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்பது உள்ளிட்ட இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment