தத்தமது அதிகாரங்களை தக்க வைக்கவே கைகள் உயர்த்தப்பட்டன : மீண்டும் பிரதமராக மஹிந்த என்கிறார் முஜிபுர் ரஹ்மான் - News View

About Us

About Us

Breaking

Sunday, April 30, 2023

தத்தமது அதிகாரங்களை தக்க வைக்கவே கைகள் உயர்த்தப்பட்டன : மீண்டும் பிரதமராக மஹிந்த என்கிறார் முஜிபுர் ரஹ்மான்

(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதன் மே தினக் கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கான யோசனையை முன்வைக்கவுள்ளது. ராஜபக்ஷர்களை மீண்டும் பதவிகளில் அமர்த்துவதற்காகவே இவ்வாறான முயற்சிகள் இடம்பெறுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர மேயர் வேட்பாளர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்துக்கு பொதுஜன பெரமுனவினர் வழங்கிய வாக்குகள் பெறுமதியற்றவை ஆகும்.

தத்தமது அதிகாரங்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காக மாத்திரமே அவர்களது கைகள் உயர்த்தப்பட்டன. மக்களுக்காக அவர்கள் வாக்களிக்கவில்லை. மக்கள் ஆணை பெற்ற எவரும் அங்கத்துவம் பெறாத தற்போதைய பாராளுமன்றம் செல்லுபடியற்றதாகவே காணப்படுகிறது.

இவ்வாறான பாராளுமன்றமே சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்களை சட்டமாக நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், மக்கள் இதனை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

எனவேதான், இந்த பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்லுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தொடர்ந்தும் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால், மறுபுறம் மே தினக் கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதற்கான கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

மே தினத்தை அடிப்படையாகக் கொண்டு பழைய தலைவர்களை மீண்டும் பதவிகளில் அமர்த்துவதற்கு பொதுஜன பெரமுன முயற்சித்து வருகிறது.

ராஜபக்ஷர்களை மீண்டும் முன்னிலைப்படுத்துவதற்காகவே இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே மீண்டும் நாட்டின் தலைவரானால் அதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகும் என்றார்.

No comments:

Post a Comment