விபத்தில் சிக்கிப் பெண் உயிரிழப்பு : வைத்தியசாலையில் அனுமதிக்க முன்னரே நகைகள் மாயம் : சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Sunday, April 30, 2023

விபத்தில் சிக்கிப் பெண் உயிரிழப்பு : வைத்தியசாலையில் அனுமதிக்க முன்னரே நகைகள் மாயம் : சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கை

விபத்துக்குள்ளான பெண்மணியை வைத்தியசாலையில் அனுமதிக்க சென்ற நபர்கள், அப்பெண் அணிந்திருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுச் சென்றதோடு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் நேற்று சனிக்கிழமை (29) கப் ரக வாகனமொன்று முன்னால் சென்று கொண்டிருந்த சைக்கிளில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் சைக்கிளை ஓட்டிச் சென்ற பெண் படுகாயமடைந்துள்ளார்.

அவ்விபத்தில் காயமடைந்தவர் உரும்பிராய் வடக்கை சேர்ந்த கனகநாயகம் உமாதேவி (72) என்பவர் ஆவார்.

அந்த பெண் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோதே உரும்பிராய் பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இந்நிலையில், விபத்தில் காயமடைந்த பெண்ணை அங்கிருந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கும் நோக்கில் நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்திருந்தனர்.

அவ்வேளை விபத்தை ஏற்படுத்திய கப் வாகனத்தில் வந்த சிலர், தாமே தமது வாகனத்தில் பெண்ணை கொண்டுசென்று மருத்துவமனையில் சேர்ப்பிப்பதாக கூறி, காயமடைந்த பெண்ணை வாகனத்தில் ஏற்றிச் சென்று, யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்த்து விட்டு, உடனே அங்கிருந்து சென்றுள்ளனர்.

அதனையடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் தகவல் அறிந்து வைத்தியசாலைக்கு வந்த பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களிடம் குறித்த பெண் உயிரிழந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.

அவ்வேளை பெண்ணின் கணவர், தனது மனைவி அணிந்திருந்த தங்கச் சங்கிலி, மோதிரம் மற்றும் காப்பு என சுமார் 6 பவுண் மதிப்புடைய நகைகளை காணவில்லை என தெரிவித்துள்ளார்.

அவ்வேளை, அப்பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் எந்த நகையையும் அணிந்திருக்கவில்லை என அங்கு தெரிவிக்கப்பட்டது.

அத்தோடு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே அவர் அணிந்திருந்த தங்க நகைகள் அபகரிக்கப்பட்டிருக்கலாம் என்றும் வைத்தியசாலையில் அப்பெண்ணை அனுமதித்தவர்களே நகைகளை அபகரித்திருக்கலாம் எனவும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து இவ்விபத்து மற்றும் நகைகளை அபகரித்தமை தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், விபத்தினை ஏற்படுத்திய கப் ரக வாகனத்தில் வந்தவர்கள் மது போதையில் இருந்ததாகவும், மிக வேகமாக வந்தே அவர்கள் விபத்தினை ஏற்படுத்தியதாகவும் சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், விபத்து நடந்த வீதியிலும் வைத்தியசாலை நுழைவாயிலிலும் உள்ள கண்காணிப்பு கெமராக்களின் வீடியோ பதிவுகளின் ஊடாக விபத்து மற்றும் நகை அபகரிப்போடு தொடர்புடையவர்களை இனங்காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதோடு கப் வாகனத்தில் பயணித்த சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment