(எம்.ஆர்.எம்.வசீ்ம்.இராஜதுரை ஹஷான்)
சர்வதேச நாணய நிதியத்தின் சட்டத்தை ஏற்கனவே அரசாங்கம் மீறியுள்ளது. அதற்காக எதிர்வரும் ஜுன் மாதமாளவில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டி வரும் என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (27) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையை இன்னும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. கோரிக்கை மட்டுமே இங்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
உடன்படிக்கையில் உள்ள தகவல்கள் எதுவும் தெரியாமலே இந்த விவாதத்தில் கலந்துகொண்டுள்ளோம். ஆனால் உடன்டிக்கையை பாராளுமன்ற்ததுக்கு சமர்ப்பிப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
அத்துடன் 16 தடவைகள் நாணய நிதித்துக்கு சென்றிருக்கிறோம். ஆனால் வங்குரோத்து நிலை அடைவதற்கு முன்னரே சென்றோம். இந்த அரசாங்கமே நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றது. வங்குரோத்து நிலைக்கு முன்னரே சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்றிருக்க வேண்டும். அவ்வாறு சென்றிருந்தால், நாணய நிதியத்துடன் நாங்கள் மாத்திரம் அவர்களுடன் பேசி, தீர்த்துக் கொள்ள முடிந்திருக்கும். ஆனால் வங்குரோத்து அடைந்த பின்னர் சென்றதால் நாணய நிதியத்துடன் நாங்கள் மாத்திரம் அல்ல, கடன் காரர்களும் சம்பந்தப்படுகின்றனர். இதுதான் அரசாங்கம் செய்த தவறு.
நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்களே சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்கின்றனர். நிறுவனமொன்று வங்கிக்கு செல்லும்போது குறித்த நிறுவனம் வங்குரோத்தடைந்திருந்தால் அதன் நிர்வாக சபையை பதவி விலகுமாறு கோரும். அப்படிதான் இங்கே நாட்டை வங்குரோத்துக்கு தள்ளிவிட்ட அரசாங்கத்துக்கு வங்கிகள் கடன் வழங்குவதில்லை. அதனால் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய அரசாங்கம் பதவி விலக வேண்டும். அப்போதுதான் கடன் பெற்றுக் கொள்ள முயடிம். இதுதான் வங்கி சம்பிரதாயம். தற்போது நாட்டுக்கு தேவையாக இருப்பது புதிய அரசாங்கமாகும்.
அத்துடன் சர்வதேச நாணய நிதித்துடனான உடன்படிக்கையை ஏற்கனவே இந்த அரசாங்கம் மீறியுள்ளது. நாங்கள் உதவுவோம் என்றும் இதற்காக ஒழுங்கு விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. சட்டத்தை முறையாக பேண வேண்டும் என்று கூறியுள்ளது.
ஆனால் தேர்தலை இந்த அரசாங்கம் ஒத்தி வைத்துள்ளது. நாங்கள் நீதிமன்றம் சென்றபோது நீதிமன்றத்தினால் தேர்தலுக்கு நிதியை வழங்குமாறு கூறும்போது அந்த உத்தரவை அரசாங்கம் மீறியுள்ளது. அந்த தீர்ப்பை வழங்கிய நீதியரசர்களை பாராளுமன்றம் அழைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த அரசாங்கம் உடன்படிக்கையை மீறியுள்ளது. இதற்கு எதிர்வரும் ஜுன் மாதமளவில் பதில் கூற வேண்டிவரும் என்றார்.
No comments:
Post a Comment