சர்வதேச நாணய நிதியத்தினால் முன்னேற்றமடைந்த நாடுகள் ஏதும் உலகில் உண்டா? : ஒப்பந்தத்துக்கு எதிராக வாக்களிப்போம் என்கிறார் விமல் வீரவன்ச - News View

About Us

About Us

Breaking

Thursday, April 27, 2023

சர்வதேச நாணய நிதியத்தினால் முன்னேற்றமடைந்த நாடுகள் ஏதும் உலகில் உண்டா? : ஒப்பந்தத்துக்கு எதிராக வாக்களிப்போம் என்கிறார் விமல் வீரவன்ச

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொண்டு முன்னேற்றமடைந்த நாடுகள் ஏதும் உலகில் உண்டா? பிரேசில், ஆர்ஜன்டீனா ஆகிய நாடுகள் இன்றும் வங்குரோத்து நிலையில் இருந்து மீளவில்லை. பொருளாதார நெருக்கடிக்கு சர்வதேச நாணய நிதியம் ஒரு சிறந்த தீர்வல்ல. ஆகவே ஒப்பந்தத்துக்கு எதிராக வாக்களிப்போம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (27) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீண்டு விட்டோம் என்ற நிலைப்பாட்டை தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. நெருக்கடியில் இருந்து மீளவில்லை, நெருக்கடிக்கு தற்காலிக இடைவேளை வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி வெகுவிரைவில் மீண்டும் தீவிரமடையும் என சர்வதேச பொருளாதார மதிப்பீடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள். நடுத்தர மக்கள் எதிர்கொண்டுள்ள பாதிப்பு தொடர்பில் அவதானம் செலுத்தாமல் சர்வதேச நாணய நிதியம் என்ற அர்ச்சனை தட்டில் கை வைத்து ஒத்துழைப்பு வழங்குமாறு அரசாங்கம் அழைப்பு விடுக்கிறது.

மேற்குலக நாடுகளின் கொள்கைக்கு அடிபணிந்தவர்களே சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பால் மாத்திரம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்கிறார்கள்.

ஆர்ஜன்டீனா, பிரேசில் ஆகிய நாடுகள் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுள்ள நிலையிலும், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளவில்லை. நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்று பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டதாக சான்றுகள் ஏதும் கிடையாது.

பொருளாதார பாதிப்பை தோற்றுவிக்கும் வகையில் தவறான ஆலோசனைகள் கடந்த அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஆகியோர் தவறாக வழிநடத்தினார்கள்.

அரச முறை வெளிநாட்டு கடன்களை மாத்திரம் மறுசீரமைக்க ஆரம்பத்தில் அவதானம் செலுத்தப்பட்டது. ஆனால், தற்போது தேசிய கடன்களையும் மறுசீரமைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

தேசிய கடன்களை மறுசீரமைத்தால் வங்கி கட்டமைப்பு, சாதாரண சேமிப்பு, ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் பாதிக்கப்படாதா என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தினால் மாத்திரம் பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண முடியாது. ஆகவே, நாணய நிதியத்தின் ஒப்பந்தத்துக்கு எதிராக வாக்களிப்போம் என்றார்.

No comments:

Post a Comment