(எம்.மனோசித்ரா)
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் பரந்தளவிலான பங்கேற்புடன் கூடிய தேசிய கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட வேண்டும். அவ்வாறான கலந்துரையாடல் இடம்பெற்று அது தொடர்பான பரிந்துரைகள் வெளியிடப்படும் வரை, சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்காதிருக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதியரசர் ரோஹிணி மாரசிங்கவினால் வியாழக்கிழமை (27) ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அண்மைய நாட்களில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து பல்வேறு சிவில் சமூகக் குழுக்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளது.
மிக விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இந்த சட்டமூலம் தொடர்பில் எம்முடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்ட சிவில் சமூகக் குழுக்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தின.
குறித்த சிவில் சமூகக் குழுக்களுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, நாட்டில் தற்போதுள்ள சூழலுக்கு எதிராக புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளமையின் நோக்கத்தை நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது.
எனவே ஜனாதிபதி அலுவலகத்துடன் இணைந்து, இது தொடர்பில் சிறந்த தேசிய உரையாடலை முன்னெடுக்குமாறு முன்மொழிகின்றோம். இதன் ஊடாக இத்தகையதொரு சட்டமூலத்தை நாடு கொண்டிருப்பதன் அவசியத்தை மதிப்பிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு, மிகவும் தாமதமாகி வரும் அமைதி மற்றும் நல்லிணக்க செயல்முறை குறித்து மேலும் ஆராய்வது கட்டாயம் என எண்ணுகின்றோம்.
இந்த சமாதானம் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள் மக்களுக்கானதாக மாத்திரம் அமைந்து விடாது.
30 ஆண்டுகளுக்கும் மேலான பயங்கரமான உள்நாட்டுப் போரின் அழிவின் கீழ் நேரடியாக பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சமூகங்கள் மற்றும் ஏனைய சமூகங்களுக்கிடையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதாக உள்நாட்டிலும் சர்வதேசத்திற்கும் பலமுறை வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.
1970 மற்றும் 1980 களில் தெற்கில் ஏற்பட்ட கலவரங்களின் போதும் பல நூற்றுக்கணக்கானோர் இதே பாதிப்புக்களை எதிர்கொண்டனர். சமாதானம் மற்றும் நல்லிணக்க செயல்முறைக்கு சமமாக தீர்வு காணும் ஒரு தேசிய கலந்துரையாடலை ஏற்பாடு செய்வதானது, உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் தேவையை சிறப்பாக வரையறுக்கும். அத்தோடு அது நாட்டு மக்கள் மத்தியில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் என்பதும் உறுதியாகும்.
எனவே உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் பரந்தளவிலான பங்கேற்புடன் கூடிய தேசிய உரையாடல் முடிவடையும் வரை, தெளிவான செயற்திட்டத்துடன் அது தொடர்பான பரிந்துரைகள் வெளியிடப்படும் வரை, அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றோம்.
No comments:
Post a Comment