அரசாங்கத்தின் நிபுணர்குழுவின் பிழையான தீர்மானத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கப்படுமா ? - ரவூப் ஹக்கீம் - News View

About Us

About Us

Breaking

Sunday, April 30, 2023

அரசாங்கத்தின் நிபுணர்குழுவின் பிழையான தீர்மானத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கப்படுமா ? - ரவூப் ஹக்கீம்

(எம்.ஆர்.எம்.வசீ்ம்.இராஜதுரை ஹஷான்)

கொவிட் நிபுணர்குழுவின் தீர்மானங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இடமிருக்கிறது. அத்துடன் நிபுணர்குழுவின் பிழையான தீர்மானத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்குமா என கேட்கிறேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ரவூப் ஹக்கீம் சபையில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (28) வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது இடையீட்டு கேள்வியின் போதே இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

அவர் இது தொடர்பாக தொடர்ந்து குறிப்பிடுகையில், வைரஸ் நீரின் ஊடாக பரவும் என்ற கொள்கையை ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரே கொண்டுவந்தார். அதனடிப்படையிலேயே கொவிட் தொற்றில் இறந்த இஸ்லாமியர்கள் மாத்திரமின்றி பெளத்தர்கள், இந்துக்கள், கத்தோலிக்கர் மிகவும் தூரப்பிரதேசமான ஓட்டமாவடிக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்யப்பட்டனர்.

இது விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்படாத, இனவாத அடிப்படையில் பார்க்கப்பட்டது. எந்தவொரு வைரஸும் நீர் ஊடாக பரவுவதில்லை என விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஒருவர் இறந்தால் அவருடன் இருக்கும் வைரஸ்களும் இறக்கும் என இப்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

அதனால் அரசாங்கம் இந்த விடயத்தில் சில இனவாதிகளால் பிழையாக வழிநடத்தப்பட்டிருப்பதை அரசாங்கம் ஏற்றுக் கொள்கின்றதா என கேட்கிறேன்.

அத்துடன் நிபுணர்குழுவின் பிழையான தீர்மானம் காரணமாக அதிகமான மக்கள் அந்த காலகட்டத்தில் இனவாத அடிப்படையில் பாதிக்கப்பட்டிருந்ததுடன் அதிகமான மன அழுத்தங்களுக்கும் ஆளாகி இருந்தார்கள். அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இடமிருக்கிறது.

அத்துடன் நாங்கள் எமது பிரச்சினைகளை அப்போது சுகாதார அமைச்சராக இருந்த பவித்ரா வன்னியாரச்சிக்கு தெரிவித்தபோது, அவரும் எமது கோரிக்கைகளை கொவிட் குழுவுக்கு திருப்பியிருந்தார்.

நிபுணர்குழுவை அரசாங்கமே தெரிவு செய்திருந்தது. அவர்கள் இனவாத அடிப்படையிலேயே இந்த விடயத்தை மேற்கொண்டிருந்தார்கள். அதனால் இவர்களை மாற்றுமாறு நாங்கள் பல தடவைகள் தெரிவித்திருந்தோம்.

எனவே நிபுணர்குழுவின் அந்த தீர்மானம் பிழையானது என்பது பாராளுமன்றத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என கேட்கிறேன்.

நிபுணர்குழுவின் தீர்மானம் காரணமாக அரசாங்கத்துக்கும் அதிக செலவு ஏற்பட்டது. அதேபோல் இறந்தவர்களின் குடுபத்தினரும் பாதிக்கப்பட்டனர். அதனால் தற்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க இடமிருக்கிறது என்பதை அரசாங்கம் ஏற்றுக் காெள்கிறதா என கேட்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment