நிவாரணத் திட்டங்கள் அரசியல் ஆதாயம் தேடும் தந்திரோபாயமாகப் பயன்படுத்தப்படுகிறதா ? - பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ள பெப்ரல் - News View

About Us

About Us

Breaking

Monday, April 3, 2023

நிவாரணத் திட்டங்கள் அரசியல் ஆதாயம் தேடும் தந்திரோபாயமாகப் பயன்படுத்தப்படுகிறதா ? - பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ள பெப்ரல்

(எம்.மனோசித்ரா)

பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டங்களில் வேட்பாளர்கள் பங்குபற்றுவது தேர்தல் சட்டத்தை மீறும் செயற்பாடாகும். எனவே இவ்வேலைத்திட்டங்களை அரச அலுவலர்கள் ஊடாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெப்ரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

நிவாரணத் திட்டங்கள் அரசியல் ஆதாயம் தேடும் தந்திரமாகப் பயன்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் சமூகத்தில் எழுந்தால், இந்த நல்லெண்ணப் பணிக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்றும் பெப்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் அவ் அமைப்பினால் பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதில் தொடர்ந்தும் தடங்கல்கள் ஏற்பட்டு வருகின்ற போதிலும், இன்னும் உத்தியோகபூர்வமாக தேர்தல் ஒத்திவைக்கப்படவில்லை. எனவே எந்த நேரத்திலும் தேர்தல் இடம்பெற வாய்ப்புள்ளது.

மேலும், அரசின் பல்வேறு நிவாரணத் திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த சந்தர்ப்பத்தில், வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் செயல்படுவதை பாராட்டுகிறோம். ஆனால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டங்களில் பங்கேற்கக் கூடாது.

இவ்வாறு விநியோகிக்கப்படும் நிவாரணங்கள் அரச நிதி அல்லது பிற நிறுவனங்கள் என்பவற்றின் ஊடாகவே வழங்கப்படுகின்றன. அவ்வாறிருக்கையில் அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்களை ஊக்குவிக்க இத்தகைய ஆதரவைப் பயன்படுத்துவது நெறிமுறையற்றது.

அத்துடன், தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் பிரதிநிதிகள் அல்லது வேட்பாளர்கள் உதவி வழங்கும் நடவடிக்கையில் பங்களிப்பது தேர்தல் சட்டத்தை மீறும் செயலாகும்.

மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் அரசு செயல்படுத்தி வரும் இத்திட்டம் அரசியல் ஆதாயம் தேடும் தந்திரமாகப் பயன்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் சமூகத்தில் எழுந்தால், இந்த நல்லெண்ணப் பணிக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

எனவே இனிவரும் நிவாரணப் பணிகளில் அரசியல்வாதிகளின் பங்கேற்பைத் தடுக்கவும், அனைத்து நிவாரணப் பணிகளையும் அரச அலுவலர்களின் தலையீட்டில் மேற்கொள்ள உரிய நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment